பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ---------------முதல் தொகுதி ஆறிய தழும்பு : 45

    “ஏன் ஸார்? ஏது இந்தத் தழும்பு? ஏதோ பெரிய தீக்காயத்தினாலே ஏற்பட்டதுபோலிருக்கிறதே?” - கால் மணி நேரத்துக்கு முன் டாக்டர் கேட்ட அதே கேள்வி மீண்டும் நெஞ்சில் சுருண்டு சுருண்டு நினைவு அலைகளாகப் புரளத் தொடங்கியது.
    சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்துவிட்ட என்னைப் பரிவாக ஆதரித்துப் பேணித் தம்முடைய கஷ்டநஷ்டங்களையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல் என் மாமா எஸ்.எஸ்.எல்.சி. வரை என்னைப் படிக்க வைத்திருந்தார். அதற்குப் பிறகும் அவருக்குப் பாரமாக இருப்பது கூடாது என்ற உணர்ச்சி என்னை வேலை தேடும் முயற்சியில் ஈடுபடுத்தி அலைய வைத்தது. மாதக் கணக்கில் கால் கடுக்க எத்தனையோ இடங்களுக்கு அலைந்து படியேறி இறங்கியதைத் தவிரக் கண்ட பயன் ஒன்றுமில்லை. கடைசியில் எனக்குப் புகலிடம் அளித்தது ஆசிரியப் பயிற்சிப் பள்ளிதான்.
    இங்கே தான் எனக்கு வாழ்க்கையில் அவளது தொடர்பும் ஏற்பட்டது. இதோ, என்னில் இருந்தவாறே என்னை வாட்டும் இந்தத் தழும்பின் தோற்றத்துக்குக் காரணமான நிகழ்ச்சியும் நடந்தது. எண்ணத் தொலையாத கற்பனைக் கனவுகளை உண்டாக்கிய அவள் சந்திப்பு இறுதியில் இப்படி ஒரே ஒரு துயரத் தழும்பாக மட்டும் நின்று நம்மை வருத்தும் என்று அப்போது நான் சிந்தித்திருக்க நியாயம் ஏது? கடைசியாக நாங்கள் பிரிந்தபோது கண்ணிர் சிந்த வைத்த அந்த நிகழ்ச்சியினால் என் மனம் அவள் காதலைக் கைவிட்டுவிடவில்லை. ஆனால் அவள்தான் என் வாழ்வு வீணாகக் கூடாது என்று தன் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.
    நான் அவளைச் சந்திக்க நேர்ந்தது, அவளோடு பழக நேர்ந்தது, அனைத்துமே இப்போது நினைத்தாலும் விசித்திரமாக இருக்கிறது. ஆனால் இந்த விசித்திரம் அன்று கண்ட அதே தனிப்பட்ட விசித்திரமல்ல! இது, வேதனை முழுக்க முழுக்கக் கலந்த விசித்திரம் அழ வைக்கும் விசித்திரம். துன்பத்தில் ஆழ்த்திவிடக் கூடிய விசித்திரம்.
    அன்று, என்னவோ பள்ளி முடிவதற்குள் காலையிலே இலேசாக இருந்த மண்டைக் கனம் பொறுக்க முடியாத தலைவலியாக உருவெடுத்து வாட்டியது. வகுப்பில் உட்கார முடியவில்லை. சக மாணவர்களிடம் சொல்லிவிட்டு என் அறைக்குப் புறப்பட்டேன்.

அறைக்கு வந்து படுத்த எனக்கு அப்புறம் என் நினைவே இல்லை.நான் காலையில் சமையல் செய்துவிட்டுப் போட்டிருந்த பாத்திரங்களெல்லாம் போட்டது போட்டபடியே கிடந்தன.

    'தம்பீ உடம்பு சுகமில்லையா, தம்பீ! சுருண்டு படுத்து விட்டாயே! ராத்திரிக்குச் சமையல்கூடச் செய்யவில்லையே!” என்று கேட்ட பக்கத்து வீட்டுக் கிழவியின் குரல் என்னை நிமிர்ந்து கண் விழித்துப் பார்க்கச் செய்தது.
    "ஆமாம் பாட்டி! பள்ளிக் கூடத்திலேயே ஏதோ தலைவலி மாதிரி இருந்தது.நாலு மணிக்கு இங்கே வந்து படுத்தவன்தான்.குளிர்க் காய்ச்சல் வேறே சேர்ந்து கொண்டது. எழுந்திருக்கவே முடியவில்லை” என்று நான் பதில் கூறினேன்.