பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / ஆறிய தழும்பு ★ 47



இரண்டாவது வருஷப் படிப்புக்காக லீவு முடிந்து நான் திரும்பிய பிறகு எங்கள் அன்பு புதிய வேகம் பெற்றது. ஆனால் அப்போதுதான் அந்த எங்கள் அன்பு மரத்தின் ஒரு பகுதி பாழடையும்படியான அந்த இடியும் விழுந்தது. அந்த நாள்தான் என் வாழ்வை வறண்டுபோகச் செய்ததற்கு மூல காரணமாக இருந்த நாள்!

வழக்கம்போலத்தான் அன்று காலையும் கோமதி வந்தாள். பாட்டியிடம் சொல்லிவிட்டு வந்த பொய்யைக் கொஞ்சமாவது உண்மையாக்க எண்ணிக் கணக்குப் பாடத்தில் இரண்டொரு சந்தேகங்களையும் கேட்டாள். நான் சொன்னேன். பின் ஏதேதோசிரிப்பு,கேலி,கும்மாளம் இப்படிக் கொஞ்சநேரம் கழிந்தது.வழக்கம் போல் அடுப்பில் உலை வைத்துச் சமையலை ஆரம்பித்தேன் அன்றும்.

என்னிடம் விடைபெற்றுக் கொண்டு போகப் புறப்பட்ட கோமதி என்ன நினைத்துக் கொண்டாளோ? "ஆமாம்! நீங்கள் இன்னும் சமையலை முடிக்கவில்லை போலிருக்கிறதே? அடடா! மணி ஆகிவிட்டதே. நீங்கள் பள்ளிக்கூடத்துக்குப் போவதற்குள் சமையல் ஆகாது போல் இருக்கிறதே... ம்ம்... நேரத்தை வீணாக்கி விட்டேன். நீங்கள் போய் குளித்துவிட்டு வாருங்கள். அதற்குள் நானே அடுப்புக் காரியத்தை முடித்துவிட்டு அப்புறம் வீட்டுக்குப் போகிறேன்” என்றாள்.

இப்படிச் சொல்லிவிட்டு அவள் அடுப்பினருகே சென்றபோது என்னால் மறுக்க முடியவில்லை.

குளித்துக் கொண்டிருந்த என்னைத் தூக்கிவாரிப் போடச் செய்தது கோமதியின் அலறல். ஒடி வந்தேன், அரைத் துண்டுடன். அங்கே நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிடச் செய்தது. கொதிக்கும் சோற்றை முழங்கையில் கொட்டிக் கொண்டு உட்கார்ந்தவாறே துடித்துக் கொண்டிருந்தாள். புடவை நுனியில் தீப்பற்றத் தொடங்கியிருந்தது. அதை அவள் உணரவில்லை. ஒரு கணம் நான் அப்படியே பித்துப் பிடித்தவன்போல் நின்று விட்டேன். அடுத்த வினாடி ஒடிப்போய் அவள் புடவைப் பக்கமாக இருந்த எரியும் விறகைப் பிடித்துத் தள்ளினேன். தள்ளின வேகத்தில் அது எகிறித் துள்ளி வந்து என் வலது முழங்கைக்கும் மணிக்கட்டுக்கும் நடுவே எரியும் கொள்ளியோடு அழுத்தியடித்தது. கையில் அடித்து மோதி அதன் மேலேயே நின்றுவிட்ட கொள்ளிக் கட்டையை ஒதுக்கிவிட்டு, அவளை நெருப்பிலிருந்து காப்பாற்றுவதற்குள் என் உயிர் போய் மீண்டது. கோமதியின் அலறலைக் கேட்டோ, தற்செயலாகவோ அங்கே வந்த முத்துப்பாட்டி எங்கள் நிலையைக் கண்டு ஒரேடியாக அழுது விட்டாள். என் வலது கையில் அழுத்தமான நெருப்புக் காயம்.

என் கையில் பட்ட நெருப்புக் காயம் பத்து இருபது நாட்களில் ஆறி இதோ இருக்கும் இந்தத் தழும்பாக ஆறி விட்டது. ஆனால் கோமதியின் காயம்.?

ரணமேறிப் புரையோடி விட்டது, அவள் கை, "விரலோடு கூடிய முன் கை முழுவதையும் உடனே ஆபரேஷன் செய்து எடுக்கவில்லையானால் கைக்கு முழுவதுமே ஆபத்து” என்று நெருக்கினார் டாக்டர்.என் நெஞ்சு துடித்து விழுந்தது. பாட்டி அழுது கதறினாள். டாக்டர் சொன்னபடி காரியத்தை முடித்துவிட்டார்.