பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



கைமுடப்பட்டு வீடு வந்த பின்னும் அந்த அழகுச் செல்வத்தை நான் புறக்கணிக்கக் கனவிலும் கருதவில்லை.ஆனால் அவள்தான் ‘என் நன்மைக்காக’ என்று கண்டிப்பாக என்னைப் புறக்கணித்து விட்டாள். “நான் கன்னியாகவே வாழ்ந்து கழிப்பேன். கை முடமாக உங்களை எனக்கு உரியவராக உரிமை கொண்டாட என் மனம் துணியவில்லை.என்னை மறந்துவிடுங்கள்” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள். நான் எதிர்த்துப் பேசி அவள் பிடிவாதத்தை அதிகரிக்க விட விரும்பவில்லை. காலப் போக்கில் அவள் மனம் மாறும், நம் காதலையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்து மெளனம் சாதித்தேன். அதே சமயம் மாமாவுக்கு உடல் நலமில்லை என்று கடிதம் வரவே, நான் ஊருக்குப் புறப்படும்படியாகிவிட்டது.

ஊருக்குச் சென்றவன் ஏறக்குறைய ஒன்றரை மாதம் அங்கிருந்து புறப்பட முடியாதபடி செய்துவிட்டது மாமாவின் உடல்நிலை.

மாமாவின் உடல்நிலையைப் பற்றி இனிமேல் கவலையில்லை என்ற சந்தர்ப்பம் ஏற்பட்டபின், நான் அங்கே சென்றேன். சென்ற எனக்கு வீடு நிலங்கரைகளை ரொக்கமாக்கிக் கொண்டு பாட்டியும் கோமதியும் ஊரைவிட்டே சென்று விட்டார்கள் என்ற பேரிடி காத்திருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அவர்கள் எங்கே போயிருப்பார்கள் என்பது யாருக்குமே சரியாகத் தெரியவில்லை. ‘கோமதி எனக்காகத் தியாகம் செய்வதாக நினைத்துக் கொண்டு எவ்வளவு பைத்தியக்காரத்தனமாக நடந்துவிட்டாள்? என்று எண்ணும்போது எனக்கே அழுகையாய் வந்தது. டிரெயினிங் சர்டிபிகேட்டுடன் அன்று ஆரம்பித்த நாடோடி வாழ்க்கை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. என்னால் அவளை மறக்க முடியவில்லை. வருடங்கள் கழிந்தாலென்ன? அவள் நினைவு தழும்பாக நிலைத்து நின்று விட்டதே?

உடம்பு தேறிப் பள்ளிக்கூடத்துக்குப் போய் வரலாம் என்ற அளவுக்கு உடம்பில் தெம்பு வந்ததும் நான் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறினேன்.

அன்று சாயங்காலம் பள்ளிக்கூடம் முடிந்ததும் அருவிக்கரைப் பக்கமாக உலாவச் சென்ற நான் பாறையொன்றில் உட்கார்ந்து பொங்கிவிழும் அருவி நீரின் பொலிவை ரசித்துக் கொண்டிருந்தேன் . எவ்வளவு நேரம் நான் அப்படியே என்னை மறந்து உட்கார்ந்து கொண்டிருந்தேனோ, எனக்கே தெரியாது!

ஆ ஐயோ!... இந்த அலறலை அடுத்து யாரோ பக்கத்தில் அருவி நீர்ப் பரப்பில் விழும் சத்தம் என்னைத் தூக்கி வாரிப் போடச் செய்தது. அலறிய குரல் ஒரு பெண்ணினுடையது என்பதும் ஒலியால் தெரிந்தது. நான் திடுக்கிட்டுப் பக்கத்தில் விரைந்தேன்.

தடித்து விழுந்து கொண்டிருந்த நீர் புரட்டிப் புரட்டித் தள்ளிட ஒரு இளம்பெண் முங்கி முழுகி நீரோடு போராடிக் கொண்டிருந்தாள். அருவியின் அசுர வேகத்தையும் மறந்து தண்ணீரிலே விழுந்து, அவளைக் காப்பாற்றிவிடலாம் என்ற அசாதரணமான நம்பிக்கையுடன் தண்ணீரில் குதித்து விட்டேன்.