பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / அலைபட்ட கடலுக்கு மேலே ★ 53



ஒளி

மாலை ஐந்தேகால் மணி. மழை மூட்டமாக இருந்ததனால் உள்ளே பொய் இருட்டுப் படர்ந்திருந்தது. விளக்குகளைப் போட்டேன். வாசனை ஊதுபத்திகள் நாலைந்தை எடுத்து ஸ்டாண்டில் கொளுத்தி வைத்தேன். விளக்கொளியில் சுருள் சுருளாக எழுந்த ஊதுபத்தியின் புகை வளையங்கள் ‘கமகம’ வென்று சுகந்தத்தைப் பரப்பின.

உறையைக் கழற்றிவிட்டு வீணையை ஜமுக்காளத்தில் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன்.

அப்போது அந்த இனிய நேரத்தில் நீ உன் மாமாவோடு அங்கே வந்தாய். உங்களோடு என் நண்பரும் வந்திருந்தார். முதல் முதலாக உன்னைப் பார்த்தபோதே நீ என்னைக் கவர்ந்துவிட்டாய். அழகும் இனிமையும் நிறைந்த ராகங்களெல்லாம் ஒரு பெண் வடிவு பெற்று எனக்கு முன் நிற்பதுபோல் தோன்றினாய் நீ. கரு வண்டுகளைப் போன்ற உன்னுடைய அந்தக் கண்கள், தந்தத்தில் செதுக்கிப் பொருத்தினது போன்ற நாசி, ரோஜா மொட்டுக்களைப் போன்ற இதழ்கள், தவள சந்திரன் போன்ற வட்டவடிவமான முகம்; கரு கருவென்று கீறி விட்டாற்போன்ற புருவங்கள்; அவற்றின் இடையே கருஞ்சாந்துப் பொட்டு!

அடி மாலா! நீ பெண்ணாகவா எனக்கு முன் வந்து நின்றாய்? சங்கீதக் கலையின் அதிதேவதையைப் போல அல்லவா வந்து நின்றாய்!

"அம்மா, மாலா! இவர்தான் உனக்குக் குரு. இவருக்கு நமஸ்காரம் பண்ணு”

உன் மாமா கூறினார். தாமரைப் பூவோடு கூடிய வஞ்சிக் கொடி ஒன்று குனிந்து நமஸ்காரம் செய்வதுபோல நீ எனக்கு நமஸ்காரம் செய்தாய்.

என் இடது கையை மறைத்துக் கொண்டிருந்த அங்கவஸ்திரம் நழுவியது. அந்த ஊனம் உன் கண்ணில் பட்டுவிடக்கூடாதே என்பதற்காக அவசர அவசரமாக அதை அங்கவஸ்திரத்துக்குள் மறைத்துக் கொண்டேன்.

நீ அன்று நீலமேகத்தின் நிறத்தில் ஒரு வாயில் புடவையைக் கட்டிக் கொண்டிருந்தாய். கருநாகமாகப் பின்னித் தொங்கவிட்டிருந்த ஜடையின் உச்சியில் மல்லிகைப் பூச்சரத்தை அள்ளிச் சொருகியிருந்தாய்.

உன் மாமாவும் என் நண்பரும் முன்பே ஜமுக்காளத்தில் உட்கார்ந்து கொண்டு விட்டனர். நீ மட்டும் மரியாதையை நினைத்தோ என்னவோ, அடக்க ஒடுக்கமாகக் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தாய்.

"உட்கார்ந்துகொள்.”மெல்லிய குரலில் சொன்னேன்.நீஉடனே ஜமுக்காளத்தில் உட்கார்ந்து கொண்டாய். எனக்கு முன் வீணை, வீணைக்கு முன் நீ!

மாலா! நீ அப்போது எப்படி உட்கார்ந்து கொண்டிருந்தாய் தெரியுமா? நவராத்தியின் போது கோயிலில் அம்மனின் தங்கச்சிலைக்கு அலங்காரம் செய்து