பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



“சுமையில்லை, ரகு அந்தப் பெண் பாடிக் கேட்டால் நீயே பிரமித்துப் போவாய், மாட்டேன் என்றே சொல்லத் தோன்றாது உனக்கு” .

“என்னவோ அப்பா! உன் சிபாரிசைத் தட்டுவதற்குத் தயங்க வேண்டியிருக்கிறது. இன்னொரு விஷயம் எனக்கு மூடிமறைத்துச் சொல்லத் தெரியாது!”

“என்ன? சொல்லேன்.”

“நான் தனி ஆள். கட்டைப் பிரம்மச்சாரி, ஒரு வயது வந்த பெண் என்னிடம் சங்கீதம் படிக்க வந்து போகிறாள் என்றால் அக்கம் பக்கத்தில் நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள். அதற்காகத்தான் பெண்கள் டியூஷனை இதுவரை நான் ஏற்றுக்கொண்டதே இல்லை!”

“நமக்கு உறுதியும் நல்லெண்ணத்தினால் வைரம்பாய்ந்த மனமும் இருக்கும்போது அக்கம் பக்கத்தார் பேசுவதைப் பற்றி என்ன கவலை?”

“எனக்குக் கவலை இல்லை. நான் கை நொண்டி, சங்கீதம் ஒன்றைத் தவிர வாழ்க்கையில் வேறெல்லாவற்றையும் வெறுத்தவன்.”

“எனக்கும் அப்படித்தான்! உங்களை நான் பரிபூரணமாக நம்புகிறேன். எப்படியாவது அந்தப் பெண்ணின் கலாஞானத்தை விருத்தி செய்துவிடுங்கள்.” நண்பருடன் வந்திருந்தவர் (அதாவது உன் மாமா) கூறினார்.

“பெண்ணின் பெயர்?”

“மாலா.”

“வயது என்ன இருக்கும்?”

“இந்த மார்கழிக்குப் பதினாறு முடியப் போகிறது.”

“கீர்த்தனைகள் - சில்லறைப் பாட்டுக்கள்- ஏதாவது மனப்பாடம் உண்டா?”

“ஏதோ கொஞ்சம் படித்திருக்கிறாள்.”

“நல்லது சாயங்காலம் ராகுகாலத்திற்கு முன்பாகக் கூட்டிக் கொண்டு வாருங்கள் பரீட்சித்துப் பார்த்து விட்டுச் சொல்கிறேன்.”

“கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவளுக்கு நீங்கள்தான் கதி, சாயங்காலம் ஐந்து மணிக்கு மேல் அழைத்துக் கொண்டு வருகிறோம்.”

“வாருங்கள்! பார்க்கலாம்.”

நண்பரும் வந்தவரும் விடைபெற்றுக்கொண்டு சென்றனர். நான் வீணையை எடுத்து உறை போட்டு மூடி வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றேன். வாழ்நாளிலேயே இதுவரைஅடைந்திராத புதிய அனுபவம் ஒன்று என்னை நோக்கி வந்து கொண்டிருப்பதுபோல எனக்குள் ஒரு கலவரம் மனத்தில் எண்ணங்களின் அலை மோதல்.