பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முதல் தொகுதி / அலைபட்ட கடலுக்கு மேலே ★ 51



ஐப்பசி மாதத்தில் ஒருநாள் காலை நேரம் வெளியே மழை பிசுபிசுவென்று தூறிக் கொண்டிருந்தது. வீணையை எடுத்து வைத்து என்னை மறந்த லயிப்பில் ஒன்றிச் சாதகம் செய்து கொண்டிருந்தேன். அப்போதுதான் என் நண்பரும் அந்தப் புதிய மனிதரும் என்னைத் தேடி வந்தார்கள். முழங்கைக்குக் கீழே முடமாயிருந்த இடது கையை மேல் துண்டால் மறைத்துக் கொண்டு அவர்களை வரவேற்றேன்.

"சார்! இவருடைய மருமகள் ஒரு பெண் இருக்கிறாள். தாயாரும் கிடையாது, தகப்பனாரும் கிடையாது; இவர்தான் வைத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். ஹைஸ்கூல் படிப்பு வரை படித்திருக்கிறாள். நல்ல சங்கீத ஞானமும் லயமான, சாரீரமும் இருக்கின்றன.நீங்கள் மனம் வைத்துக் கொஞ்சம் சங்கீத ஞானத்தை விருத்தி பண்ணிவிட்டால்...”

“நான் பெண்கள் யாருக்கும் சொல்லிக் கொடுக்கிற வழக்கமில்லையே!. இப்பொழுது வரவர டியூஷன்களையே குறைத்துக் கொண்டுவிட்டேன். தற்சமயம் யாருக்குமே சொல்லிக் கொடுக்கவில்லை.”

அந்தப் புதிய மனிதருக்குப் பதில் கூறுவதுபோல் என் நண்பரைப் பார்த்துக் கூறினேன் நான்.

“இல்லை! நீங்கள் அப்படிக் கண்டிப்பாக மாட்டேன் என்று சொல்லிவிடக் கூடாது.இப்படி ஏதாவது ஒரு வழியில் அந்தப் பெண் முன்னுக்கு வந்தால்தான் உண்டு. இவரும் அவ்வளவாக வசதி நிறைந்த ஆள் இல்லை. இவருக்கே மூன்று பெண்கள் கலியாணத்துக்குக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மருமகள் கலியாணத்தைக் கவனிக்க இவரால் எங்கே முடியப் போகிறது?”

“அதற்கு நான் என்ன செய்யலாம்?”

“இல்லை! ஒரு திக்கற்ற பெண்ணுக்குச் செய்யும் நல்ல உபகாரமாக இதை நீங்கள் கருத வேண்டும்.”

"நீங்கள் சொல்கிறது எனக்குப் புரிகிறது ஐயா! என்னிடம் சங்கீதம் படித்துக்கொண்டு போனால் அந்தப் பெண் கச்சேரி செய்து வாரிக் குவித்து விடுவாள் என்ற எண்ணமா உங்களுக்கு?”

"அப்படியெல்லாம் ஒன்றும் தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது. இதில் ஆர்வமிருக்கிறது. படித்து முன்னுக்கு வரட்டுமே என்றுதான். நீங்கள் என்னுடைய தாட்சண்ணியத்திற்காகவாவது இந்தப் பெண் விஷயத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும்.”

என் நண்பர் குழைந்தார். குரல் மட்டுமல்ல, முகமும் குழைந்து கெஞ்சுகிற பாவனையில் நின்றது.

“ஏதோ சங்கீதம் உண்டு; நான் உண்டென்று தனிக் கட்டையாய்க் காலம் தள்ளிக் கொண்டு வருகின்றேன். என் தலையில் கொண்டு வந்து சுமையைக் கட்டுகிறேன் என்கிறாயே!”