பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. அலைபட்ட கடலுக்கு மேலே
அந்தி

டற்கரையில் இருள் கவிந்து விட்டது. எல்லையற்ற கருநீல நீர்ப்பரப்பின் மேல் தரங்கப் பாய்கள் சுருண்டு சுருண்டு கரையைத் தொட்டுத் திரும்பிக் கொண்டிருந்தன. ரொட்டி, பட்டாணி விற்றுக் கொண்டிருந்த இரண்டொரு சிறுவர்களும் கடையைக் கட்டிக் கொண்டு போய் விட்டனர். பீச் ரோடிலிருந்து மெரீனா சாலையில் திரும்பும் கார்களின் விளக்கொளி இடையிடையே இருள் மூட்டத்தை ஊடுருவியது. கடற்கரை விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன. விளக்குக்கு அப்பால் தொலைவில் தள்ளி உட்கார்ந்திருந்தேன்.

கடல், அலை, ஓசை, இருள், நான் எல்லோரும் இருந்தோம்.நிம்மதி, அமைதி, ஒளி, எல்லாம் இல்லை.

அடி மாலா! நீ என் வாழ்வில் ஏனடி குறுக்கிட்டாய்? எவ்வளவு வேகமாகக் குறுக்கிட்டாயோ அவ்வளவு வேகமாகப் போய்விட்டாயே! இரக்கமில்லாமல் தூண்டில்காரன் கரையில் இழுத்துப் போடும் மீன் போல என்னை இழுத்தெறிந்து விட்டு நீ எங்கே போனாய்? போவதுதான் போனாய்! இந்த முடவன் கூட வர முடியாத இடத்துக்கு ஏன் போனாய்? எல்லாம் இறுகிப் போன கல்லாயிருந்தவனை நீ வந்து மலர் ஆக்கினாய். போகிற போக்கில் அந்த மலரை ஏன் நெருப்பில் போட்டாய்?

ஆசையே இல்லாதவனுக்கு ஆசையை எதற்காக உண்டாக்கினாய்? ஐயோ, நீ பெண் இல்லையடி. சிரிப்பும் கும்மாளமுமாகத் திரியும் வெறும் யுவதி இல்லையடி திரிபுராந்தகனை ஆட்டி வைத்த ஆதி பரையின் மூல அணுவின் கோடானு கோடி பின்னங்களில் நீயும் ஒரு பின்னமா?

என்னைச் சோதிக்க வந்தாயா? என் நாதத்தைச் சோதிக்க வந்தாயா? அல்லது உன்னையே சோதித்துக் கொள்ளத்தான் வந்தாயா? எதற்காக வந்தாய்? ஏன் போய் விட்டாய்?

இந்த முடவனோடு விளையாட வந்தாய். விளையாட்டு முடிந்தது. போய் விட்டாய். போனதுதான் போனாய்; உன்னைப் பற்றிய நினைவுகளையும் கொண்டு போயிருக்கக் கூடாதா? அவற்றை ஏன் என்னிடம் விட்டு விட்டுப் போனாய்?

உதயம்

வாடின பூவின் மணத்தைப் போல இப்போதும் அந்தப் பழைய நினைவுகளை மங்கலாக எண்ணிப் பார்க்கிறேன். நீ வந்தது, வாழ்ந்தது, போனது எல்லாம் இன்னும் பசுமையாக நினைவிருக்கின்றன.