பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / மூட நம்பிக்கை ★ 65



"இருக்கு உயிர் மட்டும் மிச்சம் இருக்கு. இந்தச் சனியன் பிடித்த வீட்டை நீங்க காலி பண்றதுக்குள்ளே அதுவும் என்றைக்காவது ஒரு நாள் போய்விடும்.”

“உன் பேச்சு உனக்கே நன்றாகயிருந்தால் சரி! தென்னை மரத்திலே தேள்கொட்டினால் பனை மரத்திலே நெறி பிடிக்கும் என்கிற கதையாக அல்லவா இருக்கிறது?”

“இந்தாருங்கள்! உங்களைப் போல உபமான, உபமேயங்கள் சொல்லி அழகாகப் பேச எனக்குப் படிப்பு போதாது. மனசிலே பட்டத்தைச் சொல்லத்தான் தெரியும்! இந்த வீட்டுக்கு வந்ததிலேயிருந்து எதுவுமே விளங்கவில்லை. குடும்பத்திலே ஒருத்தர் விடாமல் வியாதி பிடுங்கித் தின்னுகிறது. நிம்மதியே இல்லை. காலி பண்ணிவிட்டு வேறே எங்கேயாவது போனால்தான் பிழைக்கலாம். இவ்வளவுதான் எனக்குச் சொல்லத் தெரியும்.”

“சொல்லு சொல்லு! உனக்கு வாய் அலுக்கிறவரை சொல்லிக் கொண்டே இரு. நான் கேட்டால்தானே? விட்டிலுக்குப் பயந்து விளக்கை அணைக்க என்னால் முடியாது! இப்போதைக்கு இந்த வீட்டைக் காலி செய்கிற நினைவே எனக்குக் கிடையாது.”

விவாதத்தை மேலும் தொடரவிடாமல் அப்படியே நிறுத்தினேன். அவளும் பேச்சை நிறுத்திவிட்டாள். பத்துப் பன்னிரண்டு நாட்கள் ஆயிற்று. குழந்தை அந்த அவஸ்தையிலிருந்து ஒரு மாதிரிப் பிழைத்து எழுந்தது. அது ஒரு பயங்கரமான 'கண்டம்’ என்று தான் சொல்ல வேண்டும். எப்படியோ ஆண்டவன் காப்பாற்றிவிட்டான். தங்கச் சிலைமாதிரி இருந்த குழந்தை விலா எலும்பு குத்திட்டுப் பார்க்க அருவருப்பான தோற்றத்தை அடைந்துவிட்டது.

வீட்டில் அவளுக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை இல்லை.உடனடியாக வேறு வீடு மாற்றியாக வேண்டுமென்பது அவள் கட்சி. மலையே புரண்டு வந்தாலும் சரி; ‘இந்த மாதிரி ஒரு அசட்டு நம்பிக்கைக்காக வீடு மாற்ற முடியாது’ என்பது என் கட்சி. அவள் கட்சிக்குச் சுற்றுப்புறத்திலும் அக்கம் பக்கத்தார்களிடமும் ஆதரவு அதிகம். என் கட்சிக்கு நான் மட்டும்தான் ஆதரவாளன்.

தன் சபதப்படியே குழந்தை பிழைத்தெழுந்ததும் ‘அப்பாவுக்கு’க் கடிதம் எழுதிப் பிறந்த வீட்டுப் பிராயணத்துக்கும் ஏற்பாடு செய்துவிட்டாள் அவள். என் மாமனாரிடமிருந்து அவளையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு போகப் புறப்பட்டு வருவதாக எனக்குக் கடிதமும் வந்து விட்டது. ஆனால் என் பிடிவாதத்தை நான் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.

கடிதத்தை அவளிடம் கொடுத்துவிட்டு நான் கூறினேன். "இங்கே பார் ராஜம்! ஒன்றுமில்லாத விஷயத்திற்காக வீண்கோபம் கோபித்துக் கொண்டு ஊருக்குப் போகிறாய்! கடைசியாகச் சொல்கிறேன்.எனக்கும் ரோஸம் உண்டு. உன் முகத்தில்கூட விழிக்கமாட்டேன். அப்புறம், நாம் போன பின் நாளைக்கே இருப்புக் கொள்ளாமல் தவித்துப் போய் வேறு வீடு மாற்றி விட்டு உடனே நம்மை அழைத்துப் போக ஒடி