பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



வருவார்’ என்று கனவில்கூட நினைக்காதே! உனக்கு எவ்வளவு அகம்பாவமும் பிடிவாதமும் உண்டோ, அதைவிட ஒரு படி அதிகமாகவே எனக்கும் உண்டு. இவ்வளவுதான்! இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. புறப்படுவதற்கு முன் இன்னும் நன்றாக யோசித்துக்கொள்.”

அவள் பதிலே சொல்லவில்லை. கடிதத்தை வாங்கிக் கொண்டு பேசாமல் சமையலறைக்குள் போய்விட்டாள். நானும் பேசாமல் ஆபீஸுக்குப் போய் விட்டேன். 'வந்தது வரட்டும், எந்த விதத்திலும் அறிவுக்கோ, ஆராய்ச்சிக்கோ, காரண காரியங்களுக்கோ பொருந்தாத இந்த மூடநம்பிக்கைக்கு இடம் கொடுப்பதில்லை' என்று எனக்குள் உறுதி செய்து கொண்டேன்.

அன்று முதல்தேதி, சம்பளம் கிடைத்ததும் நேரேநண்பர் நாராயணன் வீட்டிற்குச் சென்று அவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தேன்.

“என்ன சார்? நான் சொன்னதைக் கவனித்தீர்களா? அவர் கேட்டார்.

“எதைச் சொல்லுகிறீர்கள்?”

“இந்த வீடு உங்களுக்கு ஆகிவரவில்லை; வேறு வீடு பாருங்கள் என்று முன்பே சொன்னேனே?

"நீங்கள் சொன்னீர்கள்! நான் இதை பெரிய காரணமாக நினைக்கவில்லை. வீடு என்ன சார் செய்யும்?”

“சரி! உங்கள் இஷ்டம். இதற்கு மேல் நான் வற்புறுத்தமாட்டேன்."

படித்தவர், சிந்தனை ஆற்றலுள்ளவர், இவர்கூட ராஜத்தைப் போலவே அசட்டுத்தனமானதை எல்லாம் நம்புகிறாரே! என்று நாராயணனைப் பற்றி எண்ணிக் கொண்டே அவர் வீட்டிலிருந்து வெளியேறினேன் நான்.நாராயணன், ராஜம், அடுத்த வீட்டு அனுபவஸ்தர், இவர்களைப் போலவே இன்னும் அநேகர் வீட்டை ஒரு காரணமாக என்னிடம் சுட்டிக் காட்டிப்பேசினார்கள்.அவர்களிடம் எரிந்து விழுந்து காரசாரமாகப் பதில் கூறினேன். சிலரிடம் பெரிய பெரிய பிரசங்கங்களைப் போலக்கூட வெளுத்து வாங்கி விட்டேன். ‘இது ஒரு முரடு சுமுகமாகப் பேசத் தெரியவில்லை’ என்று என்னைப் பற்றி அவர்கள் எண்ணிக் கொண்டால் எண்ணிக் கொள்ளட்டுமே! அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

அன்று காலை ராஜத்தின் தகப்பனார். அதாவது என் மாமனார் அவளை அழைத்துக் கொண்டு போக ஊரிலிருந்து வந்துவிட்டார். எனக்கும் அவளுக்கும் இடையே வீடு மாற்றல் காரணமாக மனஸ்தாபம்; அதனால்தான் ஊருக்குக் கிளம்புகிறாள் என்பதையெல்லாம் அறிந்து கொள்ளவிடாமல் சாமர்த்தியமாக ஏற்பாடு செய்திருந்தாள் அவள்.

"மாப்பிள்ளை! ராஜமும் குழந்தைகளும் இரண்டு மாசம் ஊரில் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். குழந்தைகளுக்கும் சீக்காய்க் கிடந்த உடம்பு தேறும் கூட்டிக் கொண்டு போகட்டுமா?”