பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



எடுத்துக் கொண்டேன். உடுத்திய அரை வேஷ்டியோடும் போட்டுக் கொண்டிருந்த மேல் சட்டையோடும் வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிட்டேன். வீட்டிலிருந்து கிளம்பும்போது இரவு ஏழேகால் மணி. கால் போன போக்கில் எங்கெல்லாமோ நடந்து, பேச்சியம்மன் படித்துறை வழியே வைகையைக் கடந்து செல்லூர் ரஸ்தாவை அடைந்தேன். மேற்குப்புறம் திரும்பித் தத்தனேரி ரோட்டில் மதுரைப் பாலத்தை நோக்கிச் சென்றபோது பாதை வழியே பஸ் வந்தது. கையை நீட்டி நிறுத்தி அதில் ஏறிக் கொண்டேன். அது ‘எந்த ஊருக்குப் போகிற பஸ்?’ என்றுகூடப் பார்க்கவில்லை. ஏறி உட்கார்ந்துகொண்ட பின் பஸ் கண்டக்டர் டிக்கெட்டுக்குப் பணம் கேட்டபோதுதான் அது பழனிக்குப் போகிறது என்று தெரிந்தது.

கண் காணாத இடத்தில் தெரிந்தவர்களுடைய முகத்தில் விழிக்காமல் உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டும். 'அந்த இடம் பழனியாகத்தான் இருக்கட்டுமே!’ என்று எண்ணிக் கொண்டேன். சாதாரண நாளாக இருந்தால் மாலை நாலரை மணிக்குமேல் மதுரையிலிருந்து பழனிக்குப் போவதற்கு பஸ் கிடையாது; தைப் பூசத்துக்காக ஸ்பெஷல் பஸ் விட்டிருந்ததனால் நான் அந்த நேரத்திலும் அன்று பழனிக்குப் போவதற்கு முடிந்தது.

முன்பின் போய்ப் பழக்கமில்லாதவன் புது ஊருக்கு நள்ளிரவில் போய் எங்கே இறங்குவது? எப்படித் தங்குவது? இதைப் பற்றி எல்லாம் யோசிக்கவே தோன்றவில்லை. கலங்கிப் போன மனத்துக்கு, வேதனையால் தளர்ந்திருக்கும் சந்தர்ப்பத்தில் முன்யோசனை குறைவு. நடக்கப் போவதை எண்ணி, வருவனவற்றை அனுமானித்து, எச்சரிக்கையாக இருக்கும் இயல்பு, வெறுப்பும் வேதனையும் நிறைந்த உலகத்துக்குக் கிடையாது.

பஸ் பழனியை அடையும்போது ஏறக்குறைய பன்னிரண்டு மணி. வழியில் ஒட்டன்சத்திரத்தில் பஸ் நிற்குமிடத்தில் நாலைந்து மலைப்பழங்களை வாங்கிச் சாப்பிட்டதுதான். இரவுப் பாட்டுக்கு அது போதும்.

சட்டைப்பையில் ஏழு ரூபாய் பதினைந்தனா மீதப் பணத்தோடும் மனத்தில் இவ்வளவென்று தொகை வகுத்துச் சொல்ல முடியாத கவலைகளோடும், பஸ்ஸிலிருந்து இறங்கினேன். புதிய இடம், புதிய ஆள், புதிய பார்வை, விழிகள் மிரண்டு மிரண்டு சுழன்றன. யார் யாரிடமோ வழி விசாரித்துக்கொண்டு மலை அடிவாரத்திலிருந்த ஒரு சத்திரத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். ஆறணா வாடகையில் ஒரு அறை பிடித்துத் தங்கினேன்.

உள்ளத்தில் ஒரே குழப்பம். உடலில் அலுப்பு. சாவுக்கு ஆசைப்பட்டுப் புது இடத்தைத் தேடிவந்தால் மட்டும்போதுமா? மனம் திடீரென்று துணிய மறுக்கிறதே! அறையை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டு வெகு நேரம் யோசித்தேன்.

உயிரை எந்தெந்த விதங்களில் போக்கிக் கொள்ளலாம்? தினப் பத்திரிகைகளிலும் , கதைகளிலும் தற்கொலைகளைப் பற்றி எவ்வளவோ நாட்கள், எத்தனையோ பல