பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / உனக்கு மட்டும் ★ 81



சம்பவங்களைப் படித்திருக்கிறேன். ஆனால் சொந்த அனுபவத்துக்கென்று பயன்படுத்தத் தேடும்போது அவையெல்லாம் அசாத்தியமானவையாகத் தோன்றுகின்றன. பயங்கரமாகவும், குரூரமாகவும் படுகின்றன.

சிந்தித்தபடியே வெறுந்தரையில் படுத்து உறங்கிவிட்டேன். அன்று இரவு அப்படியே கழிந்துவிட்டது. மறுநாள் காலையில் குளித்துவிட்டு முருகனைத் தரிசித்துவிட்டு மலைப்பிரகாரத்தில் சுற்றிவரும்போது, ‘தற்கொலை செய்து கொள்வதற்கு இதைவிட வசதியான இடம் வேறில்லை’ என்று தீர்மானித்தேன்.

மலையின் தென்புறச் சரிவில் ஒரு பெரிய பூவரசு மரம். கைக்கு எட்டுகிறாற்போல ஒரு கிளை தென்புறத்தில் பள்ளத்தை நோக்கி இறங்கியிருந்தது. சாவதற்குக்கூட முன்கூட்டியே திட்டம் போட வேண்டியிருக்கிறதே?

அந்த மரக்கிளையில் ஒருபாக நீளமுள்ள கயிற்றைக் கட்டிக் கழுத்தில் சுருக்கிக் கொண்டு தொங்கிவிட்டால் காரியம் முடிந்துவிடும். திருவிழாக் காலம்.ஆகையினால் மலைமேல் ஜனசந்தடி ஒய்ந்து தனிமை பெறுவதற்கு இரவு பதினோரு மணிக்கு மேலும் ஆகலாம். ஆனால் பரவாயில்லை. அதுவரை காத்திருந்தாவது எண்ணத்தைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டியதுதான்.

பகற்பொழுதை எப்படியோ கழித்துவிட்டேன். அவ்வளவு பெரிய ஊரில் திருவிழாக் கோலாகலத்திலும் கூட்டத்திலும் பொழுதைக் கழிப்பதா பெரிய காரியம்?

இரவு எட்டரை மணி. சாப்பாட்டை முடித்துக் கொண்டேன். ஜன்மத்திலேயே கடைசிச் சாப்பாடு அது! சத்திரத்து அறையில் எனக்குச் சொந்தமென்று சொல்லிக் கொள்ள எந்த மூட்டை முடிச்சுமில்லை.எல்லாச் செலவும் போக எஞ்சியிருந்த ஆறரை ரூபாய்ப் பணமும் சட்டைப் பையிலேயே இருந்தது. ஆனாலும் அறையை இழுத்துப் பூட்டிச் சாவியையும் பைக்குள்ளேயே போட்டுக்கொண்டேன். அது இனிமேல் என்னிடம் இருக்க வேண்டிய அவசியமில்லை. மரணப் பூட்டையே திறக்கத் துணிந்தவனுக்கு அறையின் பூட்டைத் திறக்கும் சாவி தேவையில்லைதான். ஆனாலும் எனக்கென்னவோ அது என்னிடம் இருக்கவேண்டுமென்று தோன்றியது.

மனம் பதற, உடல் நடுங்க, ஏதோ செய்யத்தகாத காரியத்தைச் செய்யத் துணிந்தவன்போல் படிகளில் ஏறி மலையுச்சியை அடைந்தேன். கடைசித் தடவையாக முருகனை கண்குளிரத் தரிசித்துக் கொண்டபின், காலையில் பார்த்து வைத்திருந்த மரத்தடியை அடைந்தேன்.

கோவிலுக்கு வெளியே மலைப் பிராகாரத்திலிருந்த விளக்குகளை எல்லாம் அனைத்துவிட்டார்கள். மணியும் பதினொன்றுக்குக் குறையாமல் ஆகியிருந்தது. சுற்றிலும் இருள் கவிந்துவிட்டது. மேல் துண்டை இரண்டாகக் கிழித்து கயிறு போல முறுக்கினேன். சுருக்குப் போட்டேன். இறுதியாக ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தேன். பார்த்தவன் அப்படியே அரண்டுபோய் நின்றேன். இருளில் நிழல் வடிவமாகத் தெரிந்த அந்தக் காட்சி என்னைத் திடுக்கிடச் செய்தது. பத்துப் பன்னிரண்டடிக்கு அப்பால் இருந்தமற்றோர் மரத்தில் என்னைப் போலவே வேறொரு

நா.பா. 1 - 6