பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / உனக்கு மட்டும் ★ 85



இருவரும் மலையடிவாரத்திலிருந்து சத்திரத்துக்குப் போகிற பாதையில் நடந்தோம்.

நல்லவேளையாக சத்திரத்து வாசற்கதவு திறந்தே இருந்தது. சத்திரத்து வேலைக்காரன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்.அந்தநிலையில் அந்தப் பெண்ணோடு என்னை யாரும் பார்த்துவிடக்கூடாதே என்று உள்ளுற பயமாக இருந்தது.

பூட்டைத் திறக்கும் ஒசைகூடக் கேட்காமல் மெல்லக் கதவைத் திறந்தேன்.

“பார்வதி உள்ளே போய்க் கதவைத் தாழிட்டுப் படுத்துக் கொள்”

அந்த அழகிய யுவதி அறைக்குள் போனாள்.

"இந்தா இந்தச் சட்டையை உள்ளே மாட்டி வை. பணம் இருக்கிறது!” நான் சட்டையைக் கழற்றி அவளிடம் கொடுத்தேன். அவள் புன்னகையோடு அதை வாங்கிக் கொண்டாள்.

கதாசிரியர்கள் எந்த எந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாமோ காதல் பிறப்பதாக அளக்கிறார்களே! இங்கே எனக்கும் பார்வதிக்கும் இடையே பிறந்த காதல் சாவின் முளையிலே தோன்றியது. வாழ்க்கை முட்களில் விழுந்து வேதனையடைந்த இரண்டு இளம் உயிர்கள் தற்கொலை என்னும் இலட்சியத்தை எட்டியபோது அகஸ்மாத்தாகப் பிணைந்த இணைப்பு!

'பயம்’, ‘பறிபோய்விடுமோ’ என்ற அவநம்பிக்கை - இதெல்லாம் ஏழைக்குத்தான் அதிகமாக இருக்கின்றன. பையிலிருந்த ஆறரை ரூபாய் காசுகளை எவனாவது தட்டிப் பறித்துக் கொண்டு போய் விடுவானோ என்று பயந்து உள்ளே பார்வதியிடம் கொடுத்து வைத்திருக்கிறேன் நான். இந்தப் பாலக்காட்டுப் பேர்வழியோ ஆயிரக்கணக்கில் பெறுமானமுள்ள நகைகளுடன் திறந்த கதவை மூடாமல் தம் அறையில் நிம்மதியாக உறங்குகிறார் விசித்திரமாகத்தான் இருக்கிறது.

அறைக்குள்ளே வளையல்கள் குலுங்கும் ஒலி இனிமையாகக் கேட்டது. சில மணிநேரப் பழக்கத்துக்கு எவ்வளவு சக்தி? அவளையே எண்ணி ஏங்க வைத்துவிட்டாளே!

மூன்று மணி வாக்கில் நானும் உறங்கிவிட்டேன். சர்க்கரைப் பாகுப்போல இனிய எண்ணங்களுடன் கண்களை உறக்கம் தழுவிவிட்டது. என்னை மறந்து தூங்கிவிட்டேன்.

எவ்வளவு நேரம் அப்படித் தூங்கினேனோ, எனக்கே தெரியாது.

விலாவில் ஏதோ ஒரு தடிக் கம்பால் ஓங்கிக் குத்தினமாதிரி இருந்தது. அலறி உளறிக் கொண்டே வாரிச் சுருட்டி எழுந்திருந்தேன். பொழுது விடிந்தது. ஏழெட்டு போலீஸ்காரர்கள் சத்திரத்துவராந்தாவில் என் அறைவாசலில் என்னைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன்தான் கையிலிருந்த லத்திக் கம்பினால் என்னை விலாவில் குத்தி எழுப்பியிருந்தான்.