பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



என் எதிரே அடுத்த அறையில் இருந்த பாலக்காட்டு வியாபாரிமுகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆத்திரத்தோடு நின்றுகொண்டிருந்தார். அவர் கைவிரல்களில் மோதிரம் ஒன்றுகூட இல்லை. என்னுடைய அறையைப் பார்த்தேன். கதவுகள் திறந்து கிடந்தன. உள்ளே ஒரு ‘ஸூட்கேஸ்’ திறந்து அதிலிருந்த பொருள்களெல்லாம் அலங்கோலமாகச் சிதறப்பட்டிருந்தன. உள்ளே பார்வதியைக் காணவில்லை. பாலக்காட்டுக்காரரின் சூட்கேஸ் என் அறையில் கிடப்பதற்குக் காரணம் எனக்குப் புரியவில்லை.

“எந்தாயா மனுஷ்யன்? அயோக்கியத்தனமாபண்ணறே?" என்று மலையாளத்தில் இறைந்து கத்தினார் பாலக்காட்டுவியாபாரி.நான் உள்ளே போய்ப் பார்த்தேன். சுவரில் மாட்டியிருந்த என் சட்டைப்பை காலியாயிருந்தது. அதிலிருந்த ஆறு ரூபாய் எட்டனாவைக் காணவில்லை.

பார்வதி மோசம் செய்துவிட்டாள். நான் ஏமாந்துவிட்டேன். பழிகாரி! என்ன நடிப்பு நடித்தாள்? சிரித்துச் சிரித்துக் கடைசியில் கழுத்தை அல்லவா அறுத்துவிட்டாள்?

பாலக்காட்டுக்காரருக்குப் பத்தாயிரம் ரூபாய் திருட்டுப் போய்விட்டது. மோதிரங்கள், பணம், கைக்கடிக்காரம் எல்லாம் சேர்த்துதான்! நான் நடந்தை நடந்தபடியே அவரிடம் சொல்லிக் கதறினேன்.

அவர்அதை நம்பவில்லை. யார்தான் நம்புவார்கள்? கான்ஸ்டேபிள் ஒருவன் என் கைகளில் விலங்கு மாட்டினான். நான் கத்தின கதறலையும் அழுத அழுகையையும் எவரும் லட்சியம் செய்யவில்லை.

போலீஸ் ஸ்டேஷனில் அடி, உதை, நகக்கண்களில் ஊசி ஏற்றுதல் எல்லா மரியாதைகளும் நடந்தன. நான் சொன்னதையே விடாப்பிடியாகத் திருப்பித் திருப்பிச் சொன்னேன். நம்பவில்லை. பாலக்காட்டுக்காரனிடம் வழக்கைப் பதிவு செய்து கொண்டு என்னைச் சிறையில் அடைத்தார்கள். சில நாட்களில் விசாரணை நடந்தது. எனக்கு ஆறு வருஷம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. ஒரு பெண்ணின் சிரிப்பையும் பேச்சையும் வெள்ளை உள்ளத்தோடு நம்பிய எனது நம்பிக்கைக்குக் கிடைத்த தண்டனை அது.

பார்வதி! முடிந்துவிட்டது.உனக்கு நான் எழுதிய கதை முடிந்துவிட்டது.நீ பெண் இல்லை. பெண் உருவில் உலாவும் வஞ்சகி. ஆனாலும் உன்னை, உன் சாமர்த்தியத்தை, அந்தச் சாமர்த்தியத்திற்குப் பொருத்தமான அழகை எண்ணி இந்த ஐந்தரை வருஷங்களுக்கு அப்பாலும் நான் ஏங்குகிறேன். வெறுப்புக்குப் பதிலாக இந்த ஏக்கம் ஏன் உண்டாகின்றதென்று என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை.

நன்னடத்தைக்காக ஆறு மாதங்களுக்கு முன் என்னை விடுதலை செய்துவிட்டார்கள். வேலூர் சப்-ஜெயிலிலிருந்து நேரே பழனிக்குத்தான் திரும்பி வந்திருக்கிறேன்.இதோ இப்போது நான் உட்கார்ந்து கொண்டிருக்கும் இடமும் அதே