பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



“சரி! உங்களுக்குத் தேவையான விவரங்களை எல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டாயிற்று. இனிமேல் தேடிப் பிடித்து உள்ளே தள்ளவேண்டியது உங்கள் பொறுப்பு” என்று எனக்கு உத்தரவிட்டார் சர்க்கிள்.

ஆகஸ்டு-செப்டம்பர்

இந்த இரண்டு மாதங்களில் உத்தியோகக் காரியங்களில் இருந்த கவலையைவிட வீட்டுக்கவலை அதிகமாக இருந்தது.அப்போது என் மனைவிக்குப் பிரசவ சமயம்.இது அவளுக்கு மூன்றாவது பிரசவம், முதல் இரண்டும் கசப்பு நிறைந்த அனுபவங்களாக முடிந்துவிட்டன.தலைச்சன் குழந்தை வயிற்றிலேயே இறந்து பிறந்தது. இரண்டாவது குழந்தை பிறந்த மறுநாள் இறந்தது. இந்த இரு ஏமாற்றங்களால் அதிர்ச்சியும், பயமும் கொண்டிருந்தாள் அவள். அம்பாசமுத்திரம் எங்களுக்குப் புதிய ஊர். என்னையும், அவளையும், வேலைக்காரியாக நியமிக்கப்பட்டிருந்த ஒரு வயதான கிழவியையும் தவிர ஒத்தாசைக்கு வேறு ஆட்கள் இல்லை. நானோ அடிக்கடி வெளியூருக்கும் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தேன்.வீட்டில் தங்கி அவள் மனத்தைத் தேற்றவோ ஆறுதல் கூறவோ எனக்கு நேரமில்லை.

"இந்தாருங்கள்! எவன் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் உப்பையோ புளியையோ காய்ச்சித் தொலைத்துப் போகட்டும். நீங்கள் பேசாமல் மூன்று மாதத்துக்கு லீவு போடுங்கோ. திருநெல்வேலிக்குப் போய்விடலாம். எனக்கென்னமோ மாசம் நெருங்க நெருங்கப் பயமாக இருக்கிறது” என்றாள் அவள். எனக்கு அவள் சொல்வது சரியென்றே தென்பட்டது. இந்த அம்பாசமுத்திரத்தில் நமக்கு வேண்டிய உறவினர்களும் இல்லை.ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடலாம் என்றால், பிரசவ ஆஸ்பத்திரியே கிடையாது. பேசாமல் திருநெல்வேலிக்குப்போய்விட்டால் வீட்டில் வைத்துக் கொண்டாலும், ஆஸ்பத்திரியில் சேர்த்தாலும், சொந்தக்காரர்கள் ஒத்தாசை கிடைக்கும். முந்தின இரண்டும்தான் அப்படியாகிவிட்டது. இந்தப் பிரசவத்திலேயாவது பெற்றுப் பிழைத்துத் தேற வேண்டுமே என்ற கவலை எனக்கு.

இதையெல்லாம் நினைத்துத்தான் சர்க்கிளிடம் மூன்று மாதங்கள் லீவு கேட்க எண்ணியிருந்தேன். ஆனால் நிலைமை லீவைப் பற்றிப் பிரஸ்தாபிக்கவே இடம் கொடுக்கவில்லை. கிடைத்திருந்த செய்திகளால் நான் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். நான் பாளையங்கோட்டையிலிருந்து திரும்பியபோது லீவு பெற்று வந்திருப்பேன் என்று அவள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“என்ன, லீவு கிடைச்சுதா?”

"சும்மா நச்சரிக்காதே. இப்போது லீவு கேட்கவே வழியில்லை. கேட்டாலும் கிடைக்காது. பிரசவத்துக்கு இங்கேதான்!” என்று எரிந்து விழுவதுபோல் பதில் சொன்னேன்.