பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



“சார்! உங்கள் காலில் விழுந்து கும்பிடுகிறேன். இன்னும் நாலுமணிநேரம் எனக்கு அவகாசம் கொடுங்கள் சார். இந்த மருந்தைக் கொண்டு போய் கொடுத்துவிட்டு நானே உங்களிடம் சரணாகதி அடைந்துவிடுகிறேன். குழந்தையைப் பெற்றுவிட்டு உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கிறாள் சார்! தயவுசெய்யுங்கள்."- அவன் துடித்தான்.

“யார்? உன் மனைவி காத்தியாயினிதானே?”

"ஆமாம், சார்! கருணை பண்ணுங்கள்!” என்று கதறினான். நான் அவனை ஊடுருவி நோக்கினேன். அது போலி நடிப்பாகத் தோன்றவில்லை. உண்மையிலேயே பாணதீர்த்தக்கரையிலுள்ள ஆசிரமத்தில் காத்தியாயினி பிரசவித்திருக்கிறாள் என்றே தோன்றியது. ஆனால் போலீஸ் ஒழுங்குப்படி கையில் சிக்கிக் கொண்ட அவனை நாலுமணிநேரம் விட்டுப் பிடிக்க எனக்கு உரிமையில்லை.

“ரங்கநாதா! நான் போலீஸ் அதிகாரி. சட்டத்துக்கும் கருணைக்கும் வெகுதூரம். உன்னைவிடமுடியாது.அந்த மருந்தை என்னிடம் கொடு, நாங்கள் உன் கோஷ்டியைச் சேர்ந்தவர்களைப் பிடிப்பதற்காகப் பாணதீர்த்தம் போகிறோம். உன் மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற நான் முடிந்தவற்றைச் செய்கிறேன்” என்றேன். அவன் வேண்டாவெறுப்புடன் மருந்துப் புட்டியை என்னிடம் கொடுத்தான். உடனே தக்க பாதுகாப்போடு பஸ் ஏற்றி அவனைப் பாளையங்கோட்டை சப் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டேன். மருந்துபுட்டியோடு நானும் மற்றவர்களும் வேகமாகப் பாணதீர்த்தத்துக்கு விரைந்தோம்.

காட்டிலே வழியை அடையாளம் கண்டுகொண்டு ஏற்ற இறக்கமான பாதைகளில் நடந்து பாணதீர்த்தத்தை அடையும்போது மாலை மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் நாங்கள் எதிர்பார்த்தபடி வேறு தேசபக்தர்கள் யாரும் அப்போது அங்கே ஆசிரமத்தில் இல்லை. ஒரு கட்டிலில் பிரசவித்த தாயும் குழந்தையும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

மருந்துப் புட்டியோடு அவசரம் அவசரமாகக் கட்டில் அருகே சென்று கையைத் தட்டி ஓசை மூலம் எழுப்ப முயன்றேன். குழந்தை விழித்துக் கொண்டு அழுதது. தங்க விக்கிரகம் போல் அழகான ஆண் குழந்தை. தாய் அசையவே இல்லை. இன்னும் பலமாகக் கையைத் தட்டினேன்.

ஊஹூம்! அவள் எழுந்திருக்கவில்லை! என் மனத்தில் பீதி ஏற்பட்டது. திடுக்கிட்டுப் போய் மூக்கருகில் கை வைத்துப் பார்த்தேன். மூச்சு வரவில்லை. என் கையிலிருந்த மருந்துப் புட்டி கீழே நழுவி விழுந்து உடைந்தது.

ஆம் பெற்றவனைத் துறந்து, கல்லூரிப் படிப்பைத் துறந்து ஒரு தேசபக்தனோடு காட்டுக்கு ஓடிவந்த அந்தப் புதுயுகச் சீதையான தேசசேவிகை காத்தியாயினி நிரந்தரமாக உறங்கிக் கொண்டிருந்தாள். காலன் அவளுடைய உயிரைப் பறித்துக் கொண்டு விட்டான். போலீஸ் வாழ்வில் இரக்கம் என்ற பண்பை அதிகம் பெறாத எனக்கே கண்களில் நீர்துளித்தது.நெஞ்சில் ஏதோ கனமாக அமுக்குவதுபோலிருந்தது.