பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி / காலத்துக்கு வணக்கம் ★ 95



அருணோதயத்தில் மலர்ந்த அந்தக் குழந்தை கையையும் காலையும் உதைத்துக் கொண்டு வீறிட்டு அழுதது. பாலுக்காகத் தாயின் நெஞ்சை எட்டித் தடவியது. தாய் பால் கொடுக்கும் நிலையிலா இருந்தாள்! கட்டிலில் கிடந்த ஒரு துணியோடு குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டேன். கான்ஸ்டபிள்களை அவளை எரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தூண்டினேன்.

அன்று! காலம் காலமாய்ப் பொங்கி விழுந்து கொண்டிருக்கும் பாணதீர்த்த அருவியின் கரையில் ஒரு தாயின் உடல், உடல் என்ற நிலையைக் கடந்து சாம்பலாயிற்று. காத்தியாயினி என்ற தாய்மை, காத்தியாயினி என்ற உண்மை, என்றும் இனி என்றும் தலையெடுக்க முடியாமல் பொதிகை மண்ணில் கலந்துவிட்டது.

குழந்தையோடு நானும் கான்ஸ்டபிள்களும் பழைய பாபநாசத்தை அடைந்தபோது அங்கே எனக்குப் பொறி கலங்கக்கூடிய இன்னொரு பேரிடி காத்திருந்தது.

‘மனைவிக்கு அபாயம், உடனே வரவும்’ என்று அம்பாசமுத்திரத்திலிருந்து தந்தி வந்திருந்தது. உடனே விக்கிரமசிங்கபுரத்திலிருந்த போலீஸ் ஜீப்பை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். காத்தியாயினியின் குழந்தையை வேறு எங்கும் விட்டுச் செல்ல இயலாததனால் என்னோடு ஊருக்குக் கொண்டு சென்றேன். புறப்படுவதற்கு முன் பாபநாசத்தில் கொஞ்சம் பசும்பால் வாங்கிக் காய்ச்சிப் புகட்டியிருந்ததினால் குழந்தையின் பசி அடங்கியிருந்தது. அம்பாசமுத்திரத்தை அடையும்போது இரவு ஒன்பதரை மணி.

வீட்டில் வேலைக்காரக் கிழவி இருந்தாள். அவள்தான் யாரோ படிக்கத் தெரிந்த ஆளைத் தேடி தந்தி எழுதச் சொல்லி அடித்தாளாம்.

“என்ன? எப்படியாச்சு?”

“அதை என் வாயாலே எப்படிச் சொல்லுவேனுங்க! இப்பத்தான் ஆச்சு! குழந்தை உசிரோட பிறக்கலை. அம்மாவுக்கு இன்னும் தெரியாது. தெரிஞ்சா மனசு விட்டுப் போயிடும்.”

வேலைக்காரி கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கூறினாள்.

குபீரென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது."நீ போய் டாக்டரை அழைத்துக் கொண்டு வா!” என்று வேலைக்காரியைத் துரத்திவிட்டுக் காத்தியாயினியின் குழந்தையை ஜீப்பிலிருந்து எடுத்து வந்தேன்.

குழந்தைகள் இடம் மாறின. காத்தியாயினியின் குழந்தை என் மனைவியின் அருகே இடம் பெற்றது. என் மனைவிக்குப் பிறந்த குழந்தை காத்தியாயினியின் ‘இறந்த குழந்தை’ போலீஸ் டாக்டரிடம் அனுப்பப்பட்டது. டாக்டர் வந்தார். மனைவிக்கு பிரக்ஞை வரவழைத்தார். அவள் குழந்தையின் முகம் கண்டு மலர்ச்சி பெற்றாள்.

காத்தியாயினியும் குழந்தையும் இறந்துவிட்டதாகப் பாளையங்கோட்டை சப் ஜெயிலில் ரங்கநாதனிடம் நானே நேரில் சென்று கூறியபோது அவன் கதறிக் கதறி