பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பிரதிபிம்பம்

723

குளியலறையிலிருந்து அவள் திரும்ப வந்து காப்பி குடிக்க அமர்ந்த போது பல வண்ண அட்டைகளோடு கூடிய ஐந்தாறு சினிமாப் பத்திரிகைகளும், தினசரிகளும் அங்கே காப்பி டிரே அருகில் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தன.

அந்தப் பத்திரிகைகளில் சிலவற்றில் மேனகாதேவியை அன்றிரவு ஏழரை மணிக்குச் சந்திக்கப் போகும் குமாரி ஜெயமாலாவின் படங்கள், வாழ்க்கை வரலாறு குறிப்புக்கள் எல்லாம் வந்திருந்தன. அதில் ஒரு பத்திரிகை ஜெயமாலாவின் மூவர்ணப் படம் ஒன்றை அட்டையிலேயே பிரசுரித்திருந்தது. ஜெயமாலா மிகவும் அழகாயிருந்தாள். அவளுடைய முகமும், கண்களும் துறுதுறுவென்று அழகாக இருந்தன. முல்லை அரும்புகள் சரம் கோர்த்தது போல் படத்தில் காண்போர் மயங்கச் சிரித்துக் கொண்டிருந்தாள் ஜெயமாலா, ஒல்லியுமில்லை, பருமனுமில்லை, அழகாக, அளவாக உடற்கட்டு.

ஜெயமாலாவின் படத்தைப் பார்த்ததும், திடீரென்று தன்னுடைய இளமைக் காலத்து ஆல்பங்களை எடுத்துப் பார்க்க வேண்டும் என்று மேனகாதேவிக்கு ஆசையாயிருந்தது. எதிரே தன் அறையில் ஒரு பீரோ நிறைய ஆல்பங்கள் இருந்தன. பீரேவைத் திறக்குமுன் அதில் பதிந்திருந்த ஆளுயர நிலைக் கண்ணாடியில் தன் உருவத்தைத் தானே ஒரு முறை நன்றாகப் பார்த்துக் கொண்டாள் மேனகாதேவி.

கண்ணாடியின் மேல் அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. இன்னும் தன் கண்களுக்குள் அப்படியே நினைவிருக்கும் கட்டு விடாத நெருக்கமான ஜெயமாலாவின் முல்லைப் பல் வரிசையை மறக்க முடியாமல், தன் பற்களைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்ட போது மேனகாதேவிக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

“இளமைக்கும் உனக்கும் இடைவெளி அதிகமாகிறது என்பதற்கு முன்னடையாளமாக உன் பல் வரிசையில் இடைவெளி அதிகமாகும்” என்று எங்கோ படித்திருந்தது அவளுக்கு நினைவு வந்தது. நேற்று வரை சகித்துக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் முடிந்த அந்த முதுமை இன்று உறுத்துவது போலிருந்தது. தன் முதுமையைத் தானே ஏற்றுக் கொள்ளவும் அங்கீகரிக்கவும் அவள் அருவருப்புக் கொண்டாள்.

நிகழ்கால முதுமையை மறக்கவும், மறைக்கவும் அந்தப் பழைய ஆல்பங்கள் பயன்படும் என்பதனால் பீரோவின் கதவைத் திறந்து ஆல்பங்களை எடுத்தாள் அவள்.

ஒவ்வோர் ஆல்பமாகப் பார்க்கப் பார்க்க நேரம் போனதே தெரியவில்லை. இளமையில் இன்று ஜெயமாலா எப்படி இருக்கிறாளோ இதைவிட தான் அழகாயிருந்திருக்கிறோம் என்று பெருமையாயிருந்தது அவளுக்கு.

மாலை மணி ஆறு. இரண்டு, மூன்று மணி நேரம் எப்படி ஓடியதென்றே தெரியவில்லை. நாடக மேடைக் காலத்திலிருந்து எடுத்த பல புகைப்படங்களைப் பார்த்ததில் மேனகாவுக்குத் தெம்பு பிறந்தாற் போலிருந்தது.