பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

722

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“என்னால் ஓட்டலுக்கெல்லாம் வர முடியாது. யார் என்னைப் பார்த்துப் பேச வருவதானாலும், என் வீட்டுக்குத்தான் வர வேண்டும்” என்று சொல்லிச் சந்திப்பதைத் தட்டிக் கழித்து விட எண்ணினாள் மேனகாதேவி. அந்த நிபந்தனைக்குக் குமாரி ஜெயமாலா ஒப்புக் கொள்ள மாட்டாள் என்று மேனகாதேவி நினைத்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் அதுவும் பலிக்கவில்லை. மேனகாதேவி போன் செய்து அந்தப் பத்திரிகைக்காரர்களிடம் தன்னால் ஓட்டலுக்கு வர முடியாது என்று கூறிய பத்து நிமிஷங்களுக்கெல்லாம் மறுபடியும் அவர்களே அவளை போனில் கூப்பிட்டு ‘உங்கள் வீட்டுக்கே வந்து உங்களைச் சந்திப்பதில் தனக்கு முன்னை விட அதிக மகிழ்ச்சி என்று ஜெயமாலா தெரிவிக்கச் சொன்னார்!’ என்பதாகக் கூறி விட்டார்கள்.

என்னவென்று பெயர் சொல்லிச் சுட்டிக் காட்ட முடியாத ஓர் உணர்வு காரணமாக அந்த இளம் நடிகை குமாரி ஜெயமாலாவை வெறுத்தாள் மேனகாதேவி, புதிதாகத் தலையெடுத்து வந்திருக்கும் அத்தனை இளம் நடிகைகளும் தத்தாரிகள், ஓடுகாலிகள் என்பது போல் ஓர் அசூயை அவள் மனத்தில் புகைந்தது. அதைத் தனியாக அசூயை என்று மட்டுமே சொல்லி விட முடியாது. கலை உலகின் பொற்காலம் எல்லாம் தன் நாட்களோடு தீர்ந்து போய் விட்டது என்று நினைக்கும் ஒரு வித மனப்பான்மையோடு அதன் மறுபுறமாக இந்த அசூயையும் கலந்திருந்தது.

அதோடு கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்ததில், அந்தப் பத்திரிகைக் காரர்களின் குறும்பும் புரிந்தது; தான் ஏதோ மறைந்து விட்ட தலைமுறையைச் சேர்ந்த ஒரு நட்சத்திரம் போலவும், அந்தக் குமாரி ஜெயமாலா வளரும் தலைமுறையைச் சேர்ந்த ஒரு நட்சத்திரம் போலவும் அபிப்பிராயம் வரும்படி பேட்டியை அவர்கள் அமைத்திருப்பதாகத் தோன்றியது. அதையே ஒரு குற்றச்சாட்டாகச் சொல்லி அதற்கு இணங்காமல் மறுத்து விடலாமா என்று யோசித்தாள் மேனகா.

இந்த யோசனைப்படி மேனகாதேவி தன் ஆட்சேபணையைச் சொல்லிய போது பத்திரிகை ஆசிரியர் அதை மிகவும் நாகுக்காக மறுத்து விட்டார்.

“பேட்டி உங்களுடைய செர்வீசையும் ஸீனியாரிட்டியையும் பெருமைப் படுத்துகிற மாதிரித்தான் இருக்கும். இதில் உங்களுக்குக் கொஞ்சம்கூடச் சந்தேகமே வேண்டாம்.”

மேனகாதேவிக்கு மனம் ஒரு நிலைக் கொள்ளாமல் தவித்தது. அப்போது பகல் மணி மூன்று. ஏர்க்கண்டிஷன் செய்யப்பட்டிருந்த படுக்கை அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து வேலைக்காரி காப்பி டிரேயை வைத்து விட்டு, “அம்மா, காப்பி” என்று குரல் கொடுத்தாள்.

“முத்தம்மா! இந்தா! உன்னைத்தான். வெளியிலே ஹாலுக்குள்ளார டீப்பாயிலே கிடக்கிற பத்திரிகை, புஸ்தகங்களையெல்லாம் இங்கே கொண்டு வந்து வை” என்று வேலைக்காரிக்கு உத்தரவு போட்டு விட்டு முகங்கழுவிக் கொள்ள எழுந்து போனாள் மேனகாதேவி.