பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96. பிரதிபிம்பம்

ந்த வாரப் பத்திரிகைக்காரர்கள் ஃபோன் செய்தபோது முதலில் மேனகாதேவி சரி என்றுதான் சொல்லியிருந்தாள். ஆனால், சிறிதுநேரம் கழித்து இரண்டாவது எண்ணமாக அதற்குச் சம்மதித்திருக்க வேண்டாமோ என்றும் தோன்றியது அவளுக்கு. தன் வயதென்ன, அனுபவம் என்ன, முதுமை என்ன? - யாரோ ஒரு முந்தாநாள் கத்துக்குட்டி நடிகையைத் தான் எதற்காகச் சந்தித்து அவளோடு சரிசமமாக எதிரும் புதிருமாய் உட்கார்ந்து பேசுவது என்று எண்ணிய போது முதலிலேயே சரி என்று சொல்லியிருக்க வேண்டாமோ என்று இப்போது பட்டது அவளுக்கு.

ஒரு வாரப் பத்திரிகை சமீப காலமாக இரண்டு தலைமுறைகள் என்ற தலைப்பின் கீழ் தொழில், கலை, அரசியல் ஆகிய துறைகளில் ஐம்பது வயதை எட்டிய பிரமுகர் களையும், அப்போதுதான் அடியெடுத்து வைக்கும் இளம் தலைமுறையினரையும் சந்திக்கச் செய்து அவர்கள் பேசுவதைத் தொகுத்து வெளியிட்டு வந்தது.

அதில் கலை என்ற வகையில் முந்திய தலைமுறையின் சிறந்த நடிகையாகிய தான், இளைய தலைமுறையின் புதிய நடிகையான குமாரி ஜெயமாலாவைச் சந்தித்து உரையாட வேண்டும் என்று பத்திரிகைக்காரர்கள் கேட்ட போது மறுத்துச் சொல்லாமல் சம்மதித்திருந்தாலும், இப்போது மீண்டும் எண்ணிய போது அந்தச் சந்திப்பு வேண்டாமென்று பட்டது மேனகாதேவிக்கு. மறுபடியும் அந்தப் பத்திரிகைக்காரர்களைக் கூப்பிட்டுத் தனது சம்மதமின்மையை எப்படிச் சொல்வதென்று இப்போது மேனகாதேவி யோசித்துக் கொண்டிருந்தாள்.

‘இசையிலும் நடிப்பிலும் சக்கரவர்த்திகளைப் போல் விளங்கிய கடந்த காலக் கதாநாயகர்களோடு நடித்துப் புகழ் பெற்ற நான் எப்படி இந்த ஊர் பேர் தெரியாத புது நடிகையைச் சந்தித்துப் பேச ஒப்புக் கொண்டேன்?’ - என்று எண்ணிய போது அவள் மனம் அதற்கு மறுத்தது.

நேரடியாக மறுப்பதற்குப் பதில் சாக்குப் போக்குச் சொல்லியே அதைத் தட்டிக் கழித்து விடலாம் என்று மேனகாதேவி எண்ணினாள்.

நகரில் உள்ள ஏதோ ஓர் ஐந்து நட்சத்திர ஓட்டலில் பகல் உணவுக்கோ, இரவு டின்னருக்கோ ஏற்பாடு செய்து அங்கேயே அவர்கள் சந்திக்கவும், பேசவும், அதை அந்தப் பத்திரிகைக்காரர்கள் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்துக் கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது.


நா.பா. 11 – 7