97. மனப்பான்மை
‘அமராவதி ஆட்டோமொபைல்ஸ்’ உரிமையாளர் ஆராவமுதன் - அமெரிக்காவிலிருந்து ஊர் திரும்பிச் சில நாட்களே ஆகியிருந்தன. ‘டெட்ராய்ட்’ நகரிலுள்ள மாபெரும் மோட்டார்த் தொழிற்சாலைகளையெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பியிருந்தார் அவர். வரவேற்பு உபசாரங்கள், ‘அமெரிக்காவில் என் அனுபவங்கள்’ என்ற பெயரிலே ஏதோ ஒரு பத்திரிகையில் வழக்கமான கட்டுரைத் தொடர் – ‘அமெரிக்காவில் நான்’ என்ற பொருளில் பல பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும், ரோடரி கிளப்பிலும் சொற்பொழிவுகள் எல்லாம் அவர் ஊர் திரும்பியது முதல் தடபுடல்பட்டுக் கொண்டிருந்தன. பக்கத்து நகரத்திற்குப் போய்த் திரும்பக் கூடப் பண வசதியில்லாத ஏழைகள் நிறைந்த இந்தத் தேசத்தில் - செளகரியமுள்ள சிலர் ஆறாயிரம் மைலுக்கப்பாலும், பத்தாயிரம் மைலுக்கப்பாலும் பறந்து போய் விட்டுத் திரும்பி வந்து - சொர்க்க பூமிக்கே போய்த் திரும்பியவர்களைப் போலப் பூமியில் கால் பாவாமல் (பறந்து வந்த ஞாபகத்திலேயே) இங்கு மிதப்பதும், அவர்களைப் பார்த்து வசதியில்லாத மற்றவர்கள் பிரமிப்பதும் ஒருவகை அநாகரிகமான பரம்பரைச் சமுதாய அவமானமாக நிலவி வருவது இந்தத் தேசத்தில்தான் ஒன்றும் புதுமையில்லையே? ஆராவமுதனும் அப்படித்தான். இந்திய முதலாளிகளால் சநாதன சொர்க்க பூமியாகப் பாவிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்ற அமெரிக்காவிற்குப் போய் விட்டு வந்த பெருமையில் மிதந்துக் கொண்டிருந்தார். தம்முடைய தொழிற்சாலை ஊழியர்களாகிய எண்ணூறு பாட்டாளிப் பெருமக்கள் அடங்கிய கூட்டமொன்றில் அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த மறுநாள் கீழ்க்கண்டவாறு சொற்பொழிவாற்றியிருந்தார் :-
“நான் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த மோட்டார்த் தொழிற்சாலையின் தொழிலாளிகளில் நூற்றுக்கு எண்பது சதவிகிதத்தினர் சொந்தமாகக் கார் வைத்திருக்கிறார்கள். சாதாரண ஃபிட்டர், கார்ப்பெண்டர், எலெக்ட்ரீஷியன் கூடத் தன்னுடைய சொந்தக் காரைத் தானே சாரத்தியம் செய்து கொண்டு தொழிற்சாலை வாயிலில் வந்து இறங்குகிறான். ஒரு தொழிலாளியும், அவனுடைய முதலாளியும் பக்கத்தில் பக்கத்தில் தங்களுடைய சொந்தக் கார்களை நிறுத்திக் கீழிறங்கிச் சந்தித்ததும் பரஸ்பரம் வணங்கிக் கொள்கிறார்கள். தொழிலாளி தன்னுடைய முதலாளியை, “மிஸ்டர் ஹென்றி குட்மார்னிங்” என்று பெயர் சொல்லி அழைத்து ‘குட்மார்னிங்’ கூறி வணங்குகிற அளவுக்கு உரிமையும் தாராள மனப்பான்மையும் பெருகியிருக்கிறது அங்கே. நம்முடைய நாட்டில் கார் வைத்திருப்பது ஒரு ‘ஸ்டேட்டஸ்’ ஆகவும் அந்தஸ்தாகவும் கருதப்படுகிறது. அமெரிக்கா போன்ற பொருள் வளமுள்ளநாடுகளிலோ நேரத்தைக் குறைத்து வேலையைப் பெருக்கி அதிகம்