உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : மனப்பான்மை

731

பாடுபடுவதற்காக வாகனம் ஒரு கருவியாகக் கருதப்படுகிறதே ஒழிய ‘ஸ்டேட்டஸ்’ ஆகக் கருதப்படுவதில்லை.அதை வைத்து மனிதனுடைய மதிப்புக் கணிக்கப்படுவதும் இல்லை.”

என்று அவர் ஆற்றிய சொற்பொழிவைச் செவிமடுத்த அமராவதி ஆட்டோமொபைல்ஸ் தொழிலாளர்கள் எண்ணுாறு பேரில் எலெக்ட்ரீஷியன் துரைராஜாவும் ஒருவன். தன் முதலாளியைப் பற்றி நீண்டநாட்களாக அவன் வைத்திருந்த ஓர் அபிப்பிராயம் இந்தச் சொற்பொழிவைக் கேட்டதனால் மாறியது. துரைராஜுவின் குடும்பம் பெரியது. துரைராஜூவின் தகப்பனார் - மூன்று தம்பிகள், ஒரு பெரிய தமையன் எல்லாருமே உழைப்பாளிகள். துரைராஜூ அமராவதி ஆட்டோமொபைல்ஸில் ஆட்டோ எலெக்ட்ரிஷியனாக வேலை பார்ப்பது தவிர - அவன் தம்பிகளும், மூத்த தமையனுமாகச் சேர்ந்து மெயின்ரோடில் ஒரு பிரைவேட் ‘ஆட்டோ எலெக்ட்ரிகல் ஒர்க்‌ஷாப்’ வைத்து நடத்திக் கொண்டிருந்தார்கள். குடும்பம் ஒன்றாகவும், ஒற்றுமையாகவும் இருந்ததனால் வருமானம் தாராளமாக இருந்தது. எனவே கையிலும் கொஞ்சம் கணிசமான தொகை சேர்ந்திருந்தது. குடும்பம் முழுவதும் கார் சம்பந்தமான தொழிலேயே பழகியிருந்ததனால் கார்களை வாங்கவும், விற்கவும், உதவுகிற தரகர்கள் பலர் துரைராஜூவுக்கு நண்பர்களாகியிருந்தனர். ஒரு சமயம், அப்படி நண்பராகியிருந்த தரகர் ஒருவருடைய சிபாரிசின் காரணமாக, துரைராஜு கொஞ்சம் மலிவான விலைக்கு வந்த பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கும்படி நேர்ந்தது. ஒரு காரை வைத்து ஆள வேண்டுமென்ற கெளவரத்துக்காகவோ, பெருமைக்காகவோ ஆசைப்பட்டுத் துரைராஜ் அந்தக் காரை வாங்கி விடவில்லை. நல்ல கண்டிஷனில் இருந்தும், மிக மலிவான விலைக்குக் கிடைத்ததனால் அதை அவன் வாங்க நேர்ந்தது. வாங்கிய பின்போ, விற்க மனம் வரவில்லை. அதன் அவசியமும், இன்றியமையாமையும், உபயோகமும் தவிர்க்க முடியாதவையாகி விட்டன. அவன் வேலை பார்த்த அமராவதி ஆட்டோமொபைல்ஸ் தொழிற்சாலையிலிருந்து பன்னிரண்டு மைல் தொலைவிலும், தம்பிமார்களும், தமையனும், வைத்திருந்த ஒர்க்‌ஷாப்பிலிருந்து பத்து மைல் தொலைவிலுமாக அந்தப் பெரிய நகரத்தின் மற்றொரு கோடியில் இருந்தது அவர்கள் குடியிருந்த வீடு. எனவே அவ்வப்போது வீட்டுக்குப் போகத் திரும்ப என்று சிக்கனமாகப் பெட்ரோலை உபயோகித்துக் காரை வைத்துக் கொள்வதென்று முடிவு செய்திருந்தார்கள் சகோதரர்கள். தம்பிகளும், தமையனும் வைத்திருந்த ஒர்க்‌ஷாப்பில் மாதம் சராசரி ஆயிரத்து முந்நூறு ரூபாயும், துரைராஜுவின் அமராவதி ஆட்டோமொபைல்ஸ் சம்பளம் இருநூறு ரூபாயுமாக ஐந்து சகோதரர்களுக்கும் சேர்த்து ஆயிரத்தைந்நூறு ரூபாய் கிடைத்துக் கொண்டிருத்தனால், அவசியத்துக்காகவும், செளகரியத்துக்காகவும் அந்தப் பழைய காரைப் பராமரிப்பது ஒரு பாரமாக அவர்களுக்குத் தோன்றவில்லை. மூத்த தமையனைத் தவிர மற்றவர்கள் எவருக்கும் திருமணமாகாததனால், குடும்ப பாரமும் அதிகமில்லை. சகோதரர்கள் ஐவருக்கும் கார் டிரைவிங் கை வந்த கலை. அதனால்