பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

636 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள் நாட்டியமாடுகிறவர்கள் காலில் கட்டிக் கொள்வார்களே, அந்தப் பாணியில் வரிசையாக ஒரு பட்டுக் கயிற்றில் சலங்கைகள் தொடுக்கப்பட்டிருந்த அதைக் கைவசம் பத்திரமாக வைத்துக் கொண்டேன். மீண்டும் ஏதாவது தடையம் கிடைக்குமா என்று எல்லா மரங்களின் அடியிலும் சுற்றி விட்டுத் திரும்பினோம். "ஏனப்பா? நேற்றிரவு அந்தச் சிவபெருமானைப் போன்ற பயங்கர உருவம் உன்னைத்துரத்தியபோது வேறு ஏதாவது ஓசைகள் கேட்டதா? அல்லது அந்த உருவம் ஏதாவது வாய் திறந்து பேசியதா? நன்றாக யோசித்து நினைவு படுத்திக் கொண்டபின் சொல்!” - தோப்பிலிருந்து திரும்பி வரும்போது நான் காவற்காரனை நோக்கிக் கேட்டேன். அவன் சிறிதுநேரம் யோசித்துவிட்டு எனக்குப் பதில் சொன்னான் : “அப்போ இருந்த நடுக்கத்துலே நான் அதெல்லாம் ஒண்னும் தெளிவா கவனிக்கலிங்க ஏதோ வெண்கலத் தாம்பாளத்தை மடமடன்னு உருட்டின மாதிரியும், பத்து இருபது மணிகளை ஒரே சமயத்திலே குலுக்கின மாதிரியும், நடுவிலே சலங்கை ஒலியும் கேட்ட மாதிரியும் இருந்திச்சுங்க. ஆனால்,அது வாயைத் திறந்து பேசலேங்கறது மட்டும் எனக்கு நல்லா நினைவிருக்குங்க” என்று கூறினான். மறுநாள் காலை ஒரு கான்ஸ்டபிளை இலஞ்சிக்கு அனுப்பி நெல்லையப்பப் பிள்ளையையும் காவற்கார சிவனாண்டியையும் ஸ்டேஷனுக்கு வரவழைத்தேன். பிள்ளையிடம், முறைப்படி ஒரு 'கம்ப்ளெயிண்டும், காவற்காரனிடம், நடந்ததாக அவன் கூறிய செய்திகளடங்கிய ஒரு வாக்குமூலமும் எழுதி வாங்கிக் கொண்டேன். “பிள்ளைவாள்! இனி ஆகவேண்டியதை நான் கவனிக்கிறேன். பழைய படியே மீண்டும் தோப்புக் காவலுக்கு நாலு ஆள் நியமித்து வையுங்கள், கூட இரண்டு மூன்று பேர் நியமித்தாலும் பரவாயில்லை. ஆனால் ஒன்று. எதற்கும் அசைந்து கொடுக்காத நல்ல தைரியசாலிகளாகப் பார்த்துக் காவலுக்கு அமர்த்துங்கள். இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் முன்பே அவர்களுக்குக் கூறி, எதற்கும் பயப்படக் கூடாது என்று எச்சரியுங்கள். சிவனாண்டியும் பழையபடி இருக்கட்டும். அதோடு இந்த வருஷம் தோப்பைச் சொந்தத்திலேயே வைத்துக் கொள்ளுங்கள்.குத்தகைக்கு விட வேண்டாம். அதனால் என்ன நஷ்டம் ஆனாலும், சரி” - என்று சில விவரங்களை அவருக்குக் கூறியபின் அவரையும் காவற்காரனையும் அவர்கள் இருப்பிடத்துக்கு அனுப்பிவிட்டேன். இதற்குப் பிறகு ஏற்கனவே என்னிடம் வந்திருந்த காசி மேஜர்புரத்துக் கொலைக் கேஸ் விஷயமாக அலையும் செயலை மேற்கொண்டதனால், இந்த மாந்தோப்பு விவகாரத்தைச் சில நாட்கள் ஒரேயடியாக மறந்து போகும்படி நேரிட்டு விட்டது. நெல்லையப்பப் பிள்ளையின் கம்ப்ளெயிண்டும் சிவனாண்டியின் வாக்குமூலமும், தடையமாகக் கிடைத்திருந்த சலங்கைக் கொத்தும் என்னுடைய மேஜை டிராயரில் தூங்கின. நான் என்ன செய்வது?நான் சும்மா இருக்கவில்லையே? இதற்கு முன்பே நடந்த வேறோரு கேஸைக் கவனிக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருந்தது. காசி