பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

644 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 'உயிர்காத்த நல்லாள்' கோவில் புல்வெளி பெரிதும் பயன்பட்டு வந்தது. மலை மேலாவது புலி முதலிய துஷ்ட மிருகங்களுக்கு மான்கள் அஞ்சி மறைவாகப் பதுங்க வேண்டியதிருக்கும். அடிவாரத்துப் புதர்களைத் தாண்டி இங்கே அம்மன் கோவில் புல்வெளிக்கு வந்துவிட்டால் நிர்ப்பயமாக மேயலாம். வேட்டைக் காரர்களாலோ துஷ்ட மிருகங்களாலோ எவ்விதமான விபத்தும் ஏற்படுவதற்கில்லை. மார்கழி, தை ஆகிய இரண்டு மாதங்களிலும் என்றைக்கு, எப்போது இங்கே வந்தாலும் புல்வெளி நிறையப் புள்ளி மான்களைக் கூட்டம் கூட்டமாகக் காணலாம். தை மாதப் பிறப்பின் போது ஊராரெல்லோரும் சேர்ந்து ‘உயிர்காத்த நல்லா’ளுக்குப் பொங்கல் படைப்பதுண்டு. 'படையலின் போது ஊர் மக்கள் எல்லோரும் கூட்டம் கூடி வந்தாலும், அம்மனின் பாதுகாவலில் உயிர் பயத்தை அறவே மறந்தவை போல வெறித்து ஓடாமல் வழக்கம் போலவே மான்கள் தம் போக்கில் மேய்ந்து கொண்டிருக்கும். இதை நானே பல முறை கண்ணாரக் கண்டிருக்கிறேன். படையலின்போது நிகழும், கொட்டோசை, சங்கோசை, மணியோசை, எல்லோரும் சேர்ந்து குரவையிடும் சப்தம் - இவ்வளவையும் கேட்டும் வெறித்து ஓடாமல் சுபாவமாகப் புல் மேய்ந்து கொண்டிருக்கும்! . அந்த வருடம் சர்க்கார் அணைக்கட்டு வேலையைத் தொடங்கும் போது கார்த்திகை மாதம் மழை காலமாக இருந்தாலும் ஆற்றுத் தண்ணிரின் போக்கை வேறு பக்கம் மடக்கித் திருப்பிவிட்டு வேலையை ஆரம்பித்திருந்தார்கள். சித்திரை வரை வேலை நடக்க முடியும் என்று திட்டமிட்டிருந்தார்கள். திட்டப்படி முடிவதற்காக வேலைகள் ஜரூராக நடந்து வந்தன. மாதம் ஒன்று கழிந்தது. அதற்கு முன்பு சீந்துவாரற்றுக் கிடந்த முத்துவேல் நாயக்கனுக்கு மேஸ்திரி வேலையை ஒட்டி ஊரில் கொஞ்சம் செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. அவனும் கொஞ்சம் பெரிய மனிதத் தோரணையோடுவளைய வளைய வந்து போய்க் கொண்டிருந்தான்.இதையெல்லாம் விட வேறு ஒர் முக்கிய காரணமும் இருந்தது. அவனுடைய செல்வாக்கிற்கு பயல்’ என்ன மாயம், வசியம் செய்தானோ, பீட்டர் துரையின் தயவை அதிகமாகச் சம்பாதித்துக்கொண்டிருந்தான்.துரைக்குக்கோழி முட்டையிலிருந்து, குடி வகைகள் வரை எது வேண்டுமானாலும் தன்னைத் தேடிக் கூப்பிடும்படி நெருக்கமான பழக்கத்தை எப்படியோ ஏற்படுத்திக் கொண்டிருந்தான்! தை மாதப் பிறப்பிற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருக்கிறபோது, ஒரு நாள் மாலை, பீட்டர்துரை முத்துவேல் நாயக்கனோடு இந்த அம்மன் கோவில் பக்கம் அருமையாக வந்திருக்கிறார். அன்றுவரை அணைக்கட்டுக்கருகிலுள்ள இடங்களிலேயே தன்னுடைய மாலை நேரத்து வாக்கிங்கை நடத்திக் கொண்டிருந்த துரை, அன்று என்ன நினைத்துக் கொண்டாரோ,வேறு ஏதாவது புதிய இடத்திற்கு அழைத்துப் போகும்படி முத்துவேலு நாயக்கனிடம் கூறினார். அதனால்தான் அவன் துரையையும் அழைத்துக்கொண்டு அன்றைக்கு அம்மன் கோவில் பக்கம் வந்திருக்கிறான்! . . . . . . . .”