பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி உயிர் காத்த நல்லாள் * 647 பெருத்துவிட்டது” என்று கூறிக்கொண்டே அவ்வளவு குண்டுகளையும் தலையைச் சுற்றி அருகிலிருந்த ஒரு புதரில் வீசி எறிந்துவிட்டுக் குடலைகள் நிறைய அருகம்புல்லோடு திரும்பிச் சென்று விட்டார்கள் அவர்களிருவரும். இரவு ஏழேகால் மணிக்கு பேட்டரி லைட்டு கோணிப்பை சகிதம் புல்வெளிக் காட்டிற்கு வந்தான் நாயக்கன் வரும்போதே அபசகுனம்போல அடுத்தடுத்து இரண்டிடங்களில் கால் இடறித் தடுக்கியது. பயலுக்கு அப்போதே மனதில் ஒரு தினுசாகப் பட்டு, கதக் கதக்'என்றிருக்கிறது! ஆனால் துரையைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற போதையில்,'இதெல்லாமே மூடநம்பிக்கை சுத்த ஜகப் புரட்டு’ என்று தன்னைத் தானே திடப்படுத்திக் கொண்டு புறப்பட்டு விட்டான். மூன்றாம் அபசகுனமாகப் பேட்டரி லைட்டில் பேட்டரி ஸெல்கள் தீரவில்லை என்றெண்ணிக் கொண்டு வந்ததற்கு மாறாகப் பாதி துரத்தில் வந்து போட்டுப் பார்த்தால், பேட்டரி எரியவில்லை. மனம் பலவாறு குழம்பி, அடிவயிற்றில் புளியைக் கரைத்தாலும், குழப்பத்தோடு குழப்பமாக முன்வைத்த காலைப் பின் வைக்காமல் புல்வெளிக் காட்டிற்கு வந்துவிட்டான்.மேகத்தில் மறைந்திருந்த மங்கலான நிலா ஒளியில் மான்கள் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தன. தான் எங்கெங்கே குண்டுகளை வைத்திருந்தானோ, அந்த இடங்களில் மான் கூட்டம் அதிகமாக இருந்ததை மனமகிழ்ச்சியோடு நோக்கித் திருப்தியடைந்தான் நாயக்கன். குண்டுகள் வெடிக்கின்றவரை தான் சாயங்காலமே பார்த்து வைத்துவிட்டுப் போயிருந்த புதரில் மறைவாக இருந்து கொள்ளலாம் என்று அந்தப் புதரை நோக்கி நடந்தான், முத்துவேலு நாயக்கன்.பீட்டர் துரை தன்னருகில் வந்து 'சபாஷ் என்று பாராட்டி, முதுகில் தட்டிக்கொடுப்பது போல ஒரு மானாகத் தோற்றம் அவனை அந்த இருட்டிலும் திமிர்ந்து ராஜதடை நடக்கும்படி செய்தது. இறுமாப்போடு அடிமேல் அடிவைத்துப் புதர்ப் பக்கம் செல்லலானான்.புதருக்குப் பக்கத்தில் காலில் ஏதோ சில உருண்டையான கற்களைப்போல இடறின. அப்படி இடறியவற்றின் விளிம்பிவிருந்து கூர்மையான ஒன்று காலில் குத்தியதைப் போல வலிக்கவே,முத்துவேலு நாயக்கன் குனிந்தான். ஒரே ஒரு விநாடி கீழே அவன் கண்ட பொருள்..?ஐயோ என்று அலற வாயைத் திறந்தான். அதற்குள் படி'ரென்று ஒர் பெரிய வெடி முழக்கம் வான முகட்டையே பிளந்துவிடுவதுபோல எழுந்தது. நாயக்கனின் அலறல் அந்தப் பெருஞ் சப்தத்தில் அடங்கி ஒடுங்கிவிட்டது.பதினைந்தடி உயரம் மேலே வானத்தில் தூக்கி எறியப்பட்டது முத்துவேலு நாயக்கனின் உடல், கோணிப்பையும் பேட்டரி விளக்கும் திசைக்கு ஒன்றாகப் போய்ச் சிதறி விழுந்தன. அடுத்தடுத்து நாலைந்து தடவை மேலே துரக்கித் துரக்கிக் கீழே விழச் செய்யப்பட்டது.உயிர் காத்த நல்லா’ளுக்கு எதிராக வினை விதைத்தான் அவன்.அவளோ வடிவேலுப் பண்டாரத்தையும் பூசாரியையும் கருவிகளாகப் பயன்படுத்திக் கொண்டு,அவன் மான்களுக்காக விதைத்து வைத்த அத்தனை குண்டுகளையும் கண்டெடுத்து, அவன் தங்க இருந்த புதரில் அவனுக்காகவே விதைத்து வைத்தாள்! - - .