உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

898

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“அது மட்டுமா? வேற்று மதத்தவரான நம்ம ஊர் சுலைமான் சேட் கூட அவங்க பஜனையின்னா - திருமுறைக் கழகத்தைத் தேடி வந்து, இடுப்பிலே வேஷ்டியைக் கட்டிக்கிட்டுப் பயபக்தியோட நிற்கிறாரு. அன்னை பரிசுத்தாதேவி கொடுத்தால் விபூதி குங்குமத்தைக் கூடமறுக்க முடியாமே வாங்கிப் பூசிக்கிறாரு. அவங்க ஒவ்வொரு தடவை வர்றப்பவும் தன் வீட்டுக்கு அழைச்சு சைவ உணவு வகைகளோட அவங்களுக்கு விருந்து வைக்கிறாரு.”

“கலைமானுக்கு அன்னையார் மேல் அபார பக்தி. சுலைமான் ஒரு முழு மனிதர். அவரைப் போல் தர்ம சிந்தனையாளர் வேறு ஒருவரைக் காண முடியாது” என்று அன்னையார் அடிக்கடி சுலைமானைப் புகழ்வார். சுலைமான் சேட்டோ அன்னையார் பேரைக் கேட்டதுமே, கண்களிலே நீர் மல்கி கருணைப் பெருக்குடனே, “அவங்க ஒரு பரித்தமான ஆத்மா முழுமையான மனித தெய்வம்”னு கை கூப்பறாரு.”

“சுலைமான் சேட்டு ஒருத்தர் மட்டுமில்லை, இந்த ஊரிலே எல்லாருமே அன்னையாரைக் கண்கண்ட தெய்வமா நினைக்கிறாங்க.” -

“ஆனால், கருவாட்டு வியாபாரமும், உப்பளங்களும் தவிர வேறு எதுவுமே இல்லாத இந்தச் சமுத்திரக் கரையோரத்துக் கிராமத்துக்கு மட்டுமே அன்னையார் ஏன் திரும்பத் திரும்ப வந்து முகாம் செய்யணும்கிறதுதான் எனக்குப் புரியலே. பல ஊர்களுக்கு முகாம் செய்து, பக்தியைப் பரப்ப வேண்டியவங்க இங்கே மட்டுமே வந்துக்கிட்டிருந்தா, மற்ற ஊர்களுக்கு அந்த அருள் மழை எப்போதுதான் பெய்யறதாம்?”

“நீங்க கேட்கிறது நியாயம்தான் நிருபர் சார்! ஆனால், அன்னையார் இந்த ஊரில் மட்டுமே ஏதோ விசேஷ ஆன்மிக அமைதியைக் காண்கிறார். இவ்வூர் மக்களின் மேல் அவர் அளவற்ற அன்பும் அருளும் காட்டுகிறார்.”

சுப்புரத்தினம் பிள்ளையின் விளக்கம் திருப்தி அளிக்கா விட்டாலும் நியூஸை வாங்கி, அன்று அனுப்ப இருந்த டெஸ்பாட்ச்சில் சேர்த்தார் நிருபர்.

அலைக்கரைப் பட்டி அப்படி ஒன்றும் பெரிய கிராமமில்லை. தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரமாயிருந்த வறண்ட ஜில்லா ஒன்றின் கடற்கரை ஓரத்துக் கிராமம் அது. சுலைமான் சேட்தான் கிராமத்தில் பெரிய மீன் வியாபாரி, தேங்காய் வியாபாரமும் உண்டு. அதைத் தவிர மொத்தம் இருபது பெரிய முஸ்லீம் குடும்பங்கள். பத்துப் பதினைந்து இந்துக் குடும்பங்கள் அடங்கிய சிறு கடலோரத்துக் கிராமம்தான் அலைக்கரைப்பட்டி.

இந்தக் கிராமத்தில் இருந்த பதினைந்து சைவ வேளாளர் குடும்பங்களும் மிகுந்த சமயப் பற்றுள்ளவை.அவர்கள் ஒன்று சேர்ந்துதான் ‘சைவத் திருமுறைக் கழகம்’ என்று ஒரு சங்கம் வைத்திருந்தனர். சுப்புரத்தினம் பிள்ளைதான் அதன் நிரந்தரக் காரியதரிசி, கடற்கரை ஓரத்தில் சுலைமான் சேட்டுடைய தென்னந்தோப்பு இரண்டு மைல் நீளம் கடலுக்கு வேலி எடுத்தது போல் அமைந்திருந்தது. இந்தத் தென்னந்தோப்பிற்கும்