127. இன்னும் எழுதப்படாத ஒரு கவிதை
‘காவிய கங்கை’ என்னும் அந்த மலையடிவாரத்துத் தோட்டம் நிலா ஒளியில் ஒரு சொப்பன உலகம் போல் அத்தனை அழகாக இருந்தது. அந்தத் தோட்டத்தின் கழுத்திற்கு மாலையிட்டது போல் அதன் வலது பக்கம் ஒன்றும், இடதுபக்கம் ஒன்றுமாக இரண்டு காட்டாறுகள் மலையிலிருந்து கீழிறங்கிச் சமவெளியில் சிறிது தொலைவு வரை ஓடிப் பின் ஒன்று சேர்ந்தன. மலைச் சரிவில் வெயில் உள்ளே நுழைய முடியாதபடி மரஞ்செடி கொடிகளால் அடர்ந்த அந்தத் தோட்டம் அமைந்திருந்தது. ஒரு மதிப்பீட்டில் ஐம்பது ஏக்கர் அல்லது அதற்கு மேலும் பரப்பு இருக்கலாமென்று தோன்றியது. தோட்டம் முழுவதும் எங்கே திரும்பினாலும், புள்ளி மான்கள் மேய்ந்துகொண்டிருக்கிற அழகையும் அங்கே காண முடிந்தது. பூக்கள், பசுமை, பாக்கு மரங்களின் பாளைகள் இவற்றின் ஒருங்கிணைந்த வாசனை வேறு. தோட்டத்தில் மயில்கள் தோகை விரித்தாடிக்கொண்டிருந்தன.
நான் மாலை இரயிலில் அந்த மலைப்பகுதிக்கு அருகே இருந்த சமீபத்து இரயில் நிலையத்தில் போய் இறங்கி, அங்கிருந்து ஒரு வாடகைக் காரில் பயணம் செய்து இருட்டத் தொடங்குகிற சமயத்துக்குக் ‘காவிய கங்கை’யில் நுழைந்திருந்தேன்.’காவிய கங்கை’யின் நிர்வாக அலுவலகத்துக்குச் சென்று, ஏற்கெனவே எங்கள் பத்திரிகையின் சார்பில் அவர்களுக்கு எழுதியிருந்த கடிதத்தை நினைவூட்டி என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். அவர்கள் அன்போடு வரவேற்றார்கள்.
“இன்றிரவு நீங்கள் அவரைப் பார்க்க முடியாது. நாளை அவருடைய தொண்ணூறாவது பிறந்த தினம். நாளைக்கு முழுவதும் நீங்கள் அவரோடு இருந்து கவனித்து உங்களுக்கு வேண்டியதை எழுதிக் கொள்ளலாம். அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்கிறேன்” என்று கூறிய அலுவலகப் பொது உறவு அதிகாரி, நான் அங்கே தங்கிக் கொள்ள விருந்தினர் விடுதியில் ஓர் அறையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.அதை ஓர் ஆசிரமம் என்பதா அல்லது சாந்தி நிகேதனத்தைப் போல ஒரு புதுமைச் சர்வ கலாசாலை என்பதா? எப்படிச் சொல்வதென்று என்னால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அந்தப் பகுதி முழுவதற்கும் சேர்த்து மொத்தமாகக் ‘காவிய கங்கை’ என்று பெயர் சூட்டியிருப்பதில் கூட அவருடைய கவித்துவத்தின் ஆழமான சாயல் தெரிந்தது. பொருள் ஆழமும் அந்தப் பெயரில் இருந்தது.
தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்த புள்ளி மான்களை விட அழகான இளம் பெண்கள் மாவிலைத் தோரணங்கள் கட்டுவதும், வண்ணக் கோலங்கள் போடுவதுமாக இருந்தார்கள். ஒரு கோலாகலமான விடியற்காலையை எதிர்பார்க்கும் சுறுசுறுப்பான முந்திய இரவாக இருந்தது அது. காவிய கங்கையின் உணவு விடுதியில்