இரண்டாம் தொகுதி : இன்னும் எழுதப்படாத ஒரு கவிதை
933
இரவு உணவை முடித்துக் கொண்டு இஷ்டம் போல் சுற்றிப் பார்க்கலானேன். ஒரு பக்கம் பெண்கள் கோலாட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சில இளைஞர்களும், குரலழகு மிக்க பெண்களும் சேர்ந்து கவி குமுத சந்திரரின் கவிதைகளை இனிதாக இசைத்துக் கொண்டிருந்தார்கள். மற்றொரு பக்கம் மாமரத்தடியில் பெண்கள் கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மூலையிலிருந்து புல்லாங் குழலிசை காற்றில் மிதந்து வந்தது. நாதஸ்வர இசையும் ஒரு பக்கத்திலிருந்து ஒலித்தது. அந்த மலைச்சாரலின் மந்தமாருதமே ஒலியுருப் பெற்றாற் போல் யாரோ வீணையும் வாசித்துக் கொண்டிருந்தார்கள். சில மாதங்களுக்கு முன் வேறு ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் காவிய கங்கையை ‘கார்டன் ஆஃப் ஆர்ட்ஸ்’ என்று வர்ணித்திருந்தது எனக்கு நினைவு வந்தது. உண்மையில் அது ஒரு கலைத் தோட்டமாகத்தான் இருந்தது.
மகா கவி குமுத சந்திரர் ஓர் அபூர்வமான கவிஞர். அவருடைய கவிதைகள் தேசத்தின் சொத்துக்களாக விளங்கின. தமிழிலிருந்து உலகின் பல மொழிகளில் அவர் மொழி பெயர்ப்பாகி இருந்தார். தேசத்தின் சுதந்திரப் போராட்டம் என்ற மாபெரும் வேள்வியில் ஈடுபட்ட போது அவருக்குக் கிடைத்த துணைப் பயன்களில் கவிதையும் ஒன்று. அவருடைய கவிதைகள் ஆங்கிலத்தில் மட்டும் பிறரால் மொழி பெயர்க்கப்படவில்லை. அவராலேயே எழுதப்பட்டன. கூடிய வரை அதனால் உணர்ச்சி வேகம் குன்றாமல் இருந்தன.
காவியம், கவிதை, கலைகள் இவைதான் அவரது குடும்பம். வேறு குடும்பம் அவருக்கு இல்லை. நைஷ்டிகப் பிரம்மசாரி, கவிதைத் திறமையால் ஈட்டிய செல்வத்தை எல்லாம் காவிய கங்கையை உருவாக்குவதில் செலவிட்டிருந்தார். சில வெளிநாட்டு இளைஞர்கள் கூட அங்கே தங்கி அவருடைய கவிதைகள் பற்றியும் இந்தியக் கவிதை இயல் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். நாளடைவில் காவிய கங்கை பல வெளிநாட்டு மாணவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் கவரத் தொடங்கியது. தென்னாட்டில் அது அமைந்திருந்த இயற்கைச் சூழலும், அதன் நூறு சதவிகித ஆசிரம வாழ்வை ஒத்த நடைமுறைகளும், அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததுதான் காரணம். சராசரி இந்தியப் பல்கலைக் கழகங்களில் இருந்த அர்த்தமற்ற முரண்பாடுகளும், ரெட் டேப்பிஸமும் ‘காவிய கங்கை’யில் இல்லை. ஒரு செடியில் அரும்பிப் பின் மெல்ல மலரும் பூவின் மலர்ச்சியைப் போல்தான் அறிவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அங்கு இருந்தன. கவிதையையோ, கலைகளையோ அது பாடங்களாக மட்டும் சொல்லித் தரவில்லை. இரசிக்கும்படி அங்கே வருகிறவர்களை அதில் தோய வைத்தது. தன் மாணவர்களை விண்ணப்பம் போட வைத்து, அதன் பின் தேர்ந்தெடுக்கும் வழக்கம் அங்கு இல்லை. மாணவர்கள் என்போர் வயது சாதி மத வித்தியாசமின்றி, பால் இன வித்தியாசமின்றி இந்தியக் கவிதையியல் அல்லது கலையியலைக் கற்கும் இடமாகத் தாங்களே அதனைத் தேர்ந்தெடுத்தனர். “காவிய கங்கை காலகேந்திரத்திற்கு இங்கே இறங்கவும்” - என்று சமீபத்து இரயில் நிலையத்தில் போர்டு இருக்குமளவு அது