பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————இரண்டாம் தொகுதி/இரண்டாவது விமர்சகன் 🞸 953

அந்தக் கட்டுரையைப் போடாமல் நிறுத்தியதோடு உடனே ‘சமீப காலமாக உனக்கு மூளை குழம்பிவிட்டது’ என்று கோபமாக மர்ம பலராமனுக்குக் கடிதமும் எழுதினார் குரு பி.எஸ்.பி.

“உங்களுக்குத்தான் மூளை குழப்பியிருப்பதாக நீங்கள் எனக்கு எழுதிய கடிதத்திலிருந்து தெரிகிறது." என்று உடனே அவருக்குக் காரமாகப் பதில் எழுதினான் மர்ம - பலராமன். ‘தான் மற்றவர்களைத் திட்டுவதற்குச் சரியான கருவியாகப் பயன்படும் ஓர் ஆள் இவன்’ என்று தானே தேர்ந்தெடுத்து முறுக்கி விட்ட ஒரு பொடியன் ‘தன்னையே திட்டுவதா?’ - என்று கொதித்தெழுந்தார். பி.எஸ்.பி. உடனே கொதிப்போடுகொதிப்பாக மர்ம பலராமனின் கட்டுரையைத் திருப்பியனுப்பியதோடு நிற்காமல், அந்த இதழ் இலக்கிய ராட்சஸனில்"இலக்கிய விமர்சனமும் சிறுபிள்ளைத் தனங்களும்” என்ற தலைப்பில் மர்ம பலராமனைத் தாக்குதாக்கென்றுத் தாக்கித் தள்ளினார், அப்போதுதான் தம்முடைய இணையற்ற குருஸ்தானம் நினைவு வந்தவர் போல். அவர் சீடனைத் தாக்கிய மூன்றாம் நாள் சீடன் ‘இலக்கியக் கொம்பன்’ என்ற பேரில் புதிய விமரிசனப் பத்திரிகை ஒன்று தொடங்கியிருப்பது தெரிய வந்தது. மர்ம - பலராமனை ஆசிரியராகக் கொண்ட இலக்கியக் கொம்பனில் “பி.எஸ்.பியின் சமீபக் குப்பைகள்” - என்ற கட்டுரை முதல் இதழிலேயே வந்திருந்தது. அதில் பி.எஸ்.பியைக் காரமாகத் தாக்கியிருந்தார், மர்ம பலராமன்.பி.எஸ்.பி.க்கு கோபமான கோபம் வந்தது. மர்ம-பலராமனைக் கழுத்தை நெறித்துக் கொன்று விடவேண்டும் போலக் கோபம் அவ்வளவு அதிகமாக வந்தது பி.எஸ்.பி.க்கு.

வரண்டு போன ஒரு விமர்சகன் அளவுக்கு மீறிக் கோபப்படும் போதுதான் இரண்டாவது விமர்சகன் பிறக்கிறானோ என்னவோ? ஆனால், இந்த பி.எஸ்.பி. என்ற பரமசிவனிடம் வரம் வாங்கிய பஸ்மாசுரனோ இவர் தலையில் கையை வைத்துப் பொசுக்கியே விட்டான். எப்படி என்று கேட்கிறீர்களா? இரண்டே மாதங்களில் ‘இலக்கிய ராட்சஸன்’நின்று விட் டது.புதிய பத்திரிகையாகிய ‘இலக்கியக் கொம்பன்’ பிரமாதமாக நடக்கத் தொடங்கி விட்டது. இப்போது பி.எஸ்.பி.யின் துர்த்தேவதை ஸ்தாபனம் பறிபோயிற்று. புதிய விமர்சனத் துர்த்தேவதையாக இருபத்தேழே வயது நிரம்பிய மர்ம பலராமன் உருவாகிவிடவே-பழைய துர்த்தேவதையின் பக்தர்களாகிய விமர்சகக் குஞ்சுகள் எல்லாம் புதிய மர்ம பலராமனின் சீடர்களாகிவிட்டனர். மர்ம பலராமன் ‘தனக்கு முன்னும் தமிழே இல்லை. தனக்குப் பின்னும் தமிழே இல்லை’ - என்ற பாணியில் ஹாங்காரச் சவால் விடலானான். ‘திருவள்ளுவர் ஆழமாக எழுதத் தவறிவிட்டார்’, ‘கம்பர் வசன கவிதை எழுதத் தெரியாதவர்’ - போன்ற கண்டனக் கட்டுரைகள் இ.கொம்பனில் வெளி வந்துதமிழர்களின் மூளையைக் குழப்பலாயின.

இனிமேல் ‘இ. கொம்பனின்’ கொழுப்பு எப்போது அடங்குமென்றுதானே கேட்கிறீர்கள்?

இ. கொம்பனிலிருந்து இன்னொரு இரண்டாவது விமர்சகன் பிரியும்போது நிச்சயமாக இ. கொம்பன் பொசுங்கிப் போகும். கவலைப்படாதீர்கள். அது வரை பொறுமையாயிருங்கள். (1978-க்கு முன்)