பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

658 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் அந்தப் பயல்களும் இது மாதிரி வந்துட்டா, உலகத்திலே சாமி, பூதம், ஒன்னுமில்லேன்னா அர்த்தம்” “அட வந்திருவாங்கன்னு வச்சிக்கிட்டுப் பேசுவமே? அப்போ நாம் ஊராருக்கு முன்னாலே தலை குனியனுமா இல்லியா? ‘'எதுக்காக அப்பிடி வச்சுக்கிட்டுப் பேசணும்? வர முடியாதுன்னே வச்சிப் பேசுவமே? ஊராரு யாரு? நாம் யாரு? நாமெல்லாம் சேர்ந்தா ஊராருதானே? சத்தியமும் மெய்யும் என்னைக்கும் எதுக்கும் தலைகுனிஞ்சதில்லை. தலைகுனியத்தான் வச்சிருக்கு திருடினமா? பொய் சொன்னமா? புறங் கூறினமா? எதுக்காவத் தலைகுனியனும்? ஏன் தலை குனியனும்? நாம் நம்பறதை நாம் செய்யறோம்.மத்தவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன? அவனுக்குத் தோணினதை அவன் செய்யட்டும். துரோபதையம்மன் யாரு பக்கம் இருக்காங்கிறதையும் தான் பார்த்திடுவமே?” நாட்டாண்மைக்கார மூப்பனார் ஆவேசம் வந்த மாதிரிப் படபடப்பாகப் பேசினார். மண்டபத்தில் அவருடைய குரல் கணிரென்று எதிரொலித்தது. அவரை எதிர்த்து வாதம் புரிந்த தலைக்கட்டுக்காரர் மேலே எதுவும் பேசத் தோன்றாமல் மெளனமானார். மூப்பனாரு சொல்றது நியாயந்தானே? முந்தாநாள் பொறந்த பயராசகோவாலு போட்டித் தீக்குழி எறங்கப் போறாங்கறதுக்காக நாம் ஏன் பயப்படனும்? மனசுலே அழுக்கிருந்தாப் பயப்படனும்; அல்லாட்டா பயப்படறதுனாலே மனசிலே அழுக்கு உண்டாகணும். நமக்கு இரண்டும் இல்லே. அப்பன்,பாட்டன்,முப்பாட்டன் காலத்திலே எதை நம்பி, எதுக்காக எதைச் செஞ்சாங்களோ,அதை நாமும் செய்யிறோம்! அவன் பொய்யின்னா அதுக்கு வேண்டிய பாடத்தை அவன் படிச்சிக்கிடட்டும்.ஆத்தாள் பாடம் கற்பிக்காம விட்டிட மாட்டா.” மூப்பனாருக்காக மற்றொரு தலைக்கட்டு பரிந்து பேசினார். “சரி! பேச்சை விடுங்க. காரியம் நெறைய இருக்கு இன்னும் லிஸ்டு’ எழுதியாகல்லே..மூணு தெருவுக்கு வசூல் பாக்கிகெடக்கு அதுக்கு வேறே போகணும்.” “நல்ல யோசனைங்க! போட்டித் தீமிதியை நாம் தடுக்கவே வேணாம். அதுவும் ஜோரா நடக்கட்டும்.முடிஞ்சா நம்ம தீமிதியைப் போதோடு முடிச்சிட்டு நாமும் போய் வேடிக்கைப் பார்ப்பமே?” "பெரிய பண்ணையாரு மவன் பூப்போலக் காலை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க முடியல்லே. வீணாக் காலை ரணமாக்கி ஒடிச்சிக்கிட்டுப் போகப் போவுது. படிச்சிருக்கானாமில்லே,படிப்பு, புத்தி போற போக்கைப் பாரு” பலவிதமான பேச்சுக்கள் கிளம்பின.இறுதியில் போட்டித் தீக்குழி பற்றிய பேச்சை முற்றிலும் நிறுத்தி விட்டுத் தங்கள் காரியங்களைக் கவனிக்கலாயினர் எல்லோரும்.