இரண்டாம் தொகுதி : வாணவேடிக்கை
1015
அந்தக் கலை கொடுத்த வருவாயிலேயே விநாயக சுந்தரம் உள்ளூரில் இரண்டு மாடி வீடு கட்டி விட்டான். நிலமும் நீச்சும் வேண்டியது வாங்கிச் சேர்த்துக் கொண்டான். பெருங்கலைஞர்களிடம் வந்து அண்டிக்கொண்டு வித்தை பழகும் இளங்கலைஞர் மாதிரி அவனிடமும் இரண்டு மூன்று ஆட்கள் அந்தக் கலையைப் பழகிக் கொண்டிருந்தனர். விநாயக சுந்தரத்துக்குத் தன் சீடர்களிடம் பரம விசுவாசம் உண்டு. ஊருக்கு மேற்கே புளியந்தோப்பில் தனியாக ஓர் ஓட்டுக் கட்டிடம், ஒதுங்கி நிற்கிற பெருமையில் துறவி போலக் காவி நிறம் போர்த்திக் காட்சியளிக்கும். அதுதான் விநாயக சுந்தரத்தின் வாணத் தயாரிப்புத் தொழிற்சாலை.
புளியந்தோப்பும், கட்டிடமும் விறகு கரிமூட்டைவியாபாரமும் கண்ணுசாமிக்குச் சொந்தம். அதை விநாயக சுந்தரத்துக்கு மாதம் இருபது ரூபாய் வாடகைக்குக் குடக்கூலிக்கு விட்டிருந்தான் கண்ணுசாமி.
“வேய்! நீர் கரியைக் காசாக்குகிறீர். நான் காசைக் கரியாக்குகிறேன். என்னிடத்தில் இந்தப் பக்கா கிராமத்தில் மாதாமாதம் இருபது ரூபாய் அடிச்சு வச்சு வாங்குறீரே. இது உமக்கு அடுக்குமா?” என்று ஒவ்வொரு தடவையும் வாடகை கொடுக்கும் போது கண்ணுசாமியை வம்புக்கு இழுப்பான் விநாயகசுந்தரம்.
“என்னங்க தம்பீ! நமக்கும் உனக்கும் நிகராகுமா? ஒரு கலியாணத்திலே, ஒரு திருவிழாவிலே, ஒரு நாள் இராத்திரிப் போய் வாணம் விட்டு முந்நூறு நானூறு கொண்டு வந்திடறே நீ. பாழாப் போன பய கிராமத்திலே, எவன் கரி மூட்டை வாங்கறேங்குறான்? மாசம் மூணு ஆனா இரண்டு கரி மூட்டை விலைக்குப் போகுது!” என்று கண்ணுசாமி பதிலுக்குச் சடைத்துக் கொள்ளுவான். விநாயக சுந்தரம் ஹாஸ்ய புருஷன்; எதையும் வேடிக்கையாகப் பேசுவான். வாணத்தைப் போலவே ஓர் அவுட்டுச் சிரிப்பு. அவனுக்கு மட்டும்தான் அந்த மாதிரிச் சிரிக்கத் தெரியும். காசும் பணமுமாகப் பெருவாழ்வு வாழ்ந்தான் அவன். நாடகக் கலைஞர்களையும், இசைக் கலைஞர்களையும்போல ஐந்து விரல்களிலும் மோதிரம் மின்ன, சரிகைத் துப்பட்டாகவும், மல்வேஷ்டியுமாக உல்லாச வாழ்வு வாழும் வசதியை அவன் தனது வாணத் தொழிலால் தேடிக்கொண்டிருந்தான். ஆனாலும், வாழ்வில் அவனுக்கு ஒரு பெரிய குறை. அவனுக்குத் திருமணம் நடந்த போதே திருமணம் நடந்த மற்றவர்களெல்லாம் குழந்தையும், குட்டியுமாகக் குடும்பம் பெருகி வாழ்ந்தார்கள். இருபத்தாறாவது வயதில் அவனுக்குத் திருமணம் நடந்தது. நாற்பத்திரண்டு வயது வரை அவன் வீடு குழந்தைகள் தவழும் பாக்கியத்தைப் பெறவில்லை.
“ஏலே ஐயா! எனக்கு நெய்ப்பந்தம் பிடிக்க ஒரு பேரப் பயல் பிறக்காமலே என்னைப் போக விட்டிடுவே போலிருக்கே” என்று அடிக்கொரு தரம் அவனுடைய கிழத் தந்தை பெருமூச்சு விட்டுக் கொண்டே அவனிடம் குறைப்பட்டுக் கொள்ளுவார். ஊர்க் குழந்தைகள் எல்லாம் தீபாவளி, கார்த்திகைப் பண்டிகைகளின் போது அவனுடைய தொழிற்சாலையில் உற்பத்தி செய்த மத்தாப்புப் பெட்டிகளை வைத்துக் கொண்டு திரியும். அவன் வீட்டில் மத்தாப்புக் கொளுத்த ஒரு குழந்தையில்லை. வெளிக்குச் சிரிப்பும் குதூகலமுமாக வாழ்ந்தாலும் நீறு பூத்த நெருப்புப் போல அவன்