138. வாணவேடிக்கை
அந்த நாளில் விநாயக சுந்தரத்துக்கு அப்படி ஒரு பெயர். எந்தத் திருமண ஊர்வலமானாலும் கோவில் உற்சவமானாலும், அதில் விநாயக சுந்தரத்தின் வாண வேடிக்கை ஒரு முக்கியமான அம்சமாக இருக்கும். திருமணப் பத்திரிகைகளிலும், உற்சவ அழைப்பிதழ்களிலும், இன்னாருடைய பாட்டுக் கச்சேரி, இன்னாருடைய நாதஸ்வரம், இன்னாருடைய சொற்பொழிவு என்று சிறப்பாகக் குறிப்பிடுகிற மாதிரி “இன்னாருடைய வாண வேடிக்கை” என்று போடுகிற அளவிற்கு அவன் ஒரு நல்ல அந்தஸ்தை அடைந்திருந்தான்.
“ஐயா! வாணம் உலகத்துக்கெல்லாம் வேடிக்கை. அதைச் செய்கிறவனுக்கு அது ஒவ்வொரு கணமும் வினை. நீங்கள் என்னமோ கூலிக்காரனுக்குப் பேசுகிற மாதிரிப் பணம் பேசுறீங்க” என்று தன் தொழிலின் அருமையையும், தரத்தையும் சொல்லித் திருமணங்களுக்கும், திருவிழாக்களுக்கும் அழைக்க வருகிறவர்களிடம் அவன் ரேட்டுப் பேசுகிற தோரணையே தனிப்பட்டதாக இருக்கும். சுற்று வட்டாரத்தில் நான்கைந்து ஜில்லாக்களில் அவன் பேர் பிரசித்தம். அந்தத் தொழிலுக்கு அவன்தான் மன்னன். நட்சத்திர வாணம், பூவாணம், அவுட்டு, சரவெடி என்று வகை வகையாக வாணங்கள் உற்பத்தியாகும் அவனிடம். அந்தத் தொழிலுக்கான வெடிமருந்து கந்தக லைசென்ஸ் அவனுக்கு உண்டு. மூங்கில் குழாயும், களிமண்ணும், வெடிமருந்தும், உலகெங்கும்தான் இருக்கின்றன. ஆனால், அவை விநாயக சுந்தரத்தின் கையில் அபூர்வ வாணங்களாக உருவாகி விட்டால் என்னென்ன அற்புதங்களை ஆகாய வெளியில் உண்டாக்கிக் காட்டி வியப்பூட்டுகின்றன?
அவ்வப்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப அவன் வாணங்களுக்குப் பெயர் வைப்பான். ராக்கெட்டையும், ஸ்புட்னிக்கையும் பற்றிப் பத்திரிகைகளில் அடிபட்டால் ராக்கெட் வாணமும், ஸ்புட்னிக் வாணமும் அவனுடைய கைகளில் உருவாகி விடும். தமிழ்ப் பண்டிதருக்குத் தொல்காப்பியம் படித்ததிலுள்ள கர்வம், தன் வாணக் கலையில் அவனுக்கும் உண்டு.
“இதென்னடா தறுதலைப்பய வேலை? வெடி மருந்தையும், குழாயையும் வச்சுக்கிட்டு மாரடிக்கிறது? வருடத்துக்கு மூணு நாலு தடவை எவனாவது வாண வேடிக்கைக்குக் கூப்பிடுகிறான். இதை நம்பிப் பொழைக்க முடியுமா? வேறே ஏதாவது உருப்படியான வேலையாப் பாரப்பா!” என்று அவனுடைய தகப்பனார் ஆரம்பத்தில் அவனைக் கண்டித்ததுண்டு.
நாளாக ஆக அந்த வித்தையில் அவன் சம்பாதிக்கத் தொடங்கிய புகழையும், பொருளையும் கண்டு பின் அவன் போக்குப்படி விட்டு விட்டார் அவர்.