பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140. கடைசியாக ஓர் ஆண்பிள்ளை

த்திரிகை ஆபீஸ் காண்டீனில் மாதம் நானூறு ரூபாய் சம்பளம் வாங்குகிற ஒரு சரக்கு மாஸ்டர் எதிர் கொண்டு அழிக்க முடியாத பகையாக இருந்தது அது. அடுப்படியில் வேர்வை சொட்டச் சொட்ட மாடாக உழைக்கும் ஒரு சரக்கு மாஸ்டருக்கு இத்தனை அழகான மகள் பிறந்திருக்கக் கூடாதுதான்.

மன எரிச்சலாலும், எதுவுமே செய்ய முடியாத கையாலாகாத்தனத்தினால் பிறந்த வேதனையினாலும் பல சமயங்களில் அனந்த பத்மநாபன் என்ற முழுப் பெயரை உடைய அனந்துவுக்கே இப்படித் தோன்றியது. அந்தப் பிரச்னை அவர் மனத்தை வாட்டி எடுத்தது.

ஒரே பெண், அதுவும் தாயில்லாப் பெண். அவளுக்கு இப்படிப்பட்ட துன்பங்கள் நேருவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது. இந்த வேதனையினால் அனந்துவுக்குத் தொடர்ந்து பல நாட்களாக இராத் தூக்கமில்லாமல் போய் விட்டது. வேலையை விட்டு விட்டுப் பெண்ணின் கல்லூரிப் படிப்பையும் பாதியில் நிறுத்திக் கொண்டு சென்னையை விட்டு ஊரோடு திரும்பிப் போய் விடலாமா என்று கூட அவர் யோசித்தார்.

திருவல்லிக்கேணி வேங்கடரங்கம் பிள்ளைத் தெரு என்பது, இப்பால், கடலோரத்துக் குடிசைப் பகுதிகளுக்கும் அப்பால், மேற்குப் பக்கம் சம்பிரதாயமான பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலைச் சுற்றிய தெருக்களுக்கும் இடையே அமைந்திருந்தது.

அந்தத் தெருவிலுள்ள பல ஒண்டுக் குடித்தனங்கள் அடங்கிய ஒரு வீட்டில் ஒரு போர்ஷனில்தான் அனந்து குடியிருந்தார். அந்த வீட்டில் நடுவே நடப்பதற்குச் சிமெண்டுத் தளமிட்ட பாதையின் இருபுறமும் எதிரெதிராக மூன்றும், மூன்றும் ஆறு ஒண்டுக் குடித்தனப் போர்ஷன்கள் இருந்தன. அதை ஒரு வீடு என்று சொல்வதை விட ஒண்டுக் குடித்தனப் போர்ஷன்கள் அடங்கிய ஸ்டோர்ஸ் என்றே சொல்லி விடலாம். அனந்து வேலை பார்த்த காண்டீன் இருக்கும் பத்திரிகைக் காரியாலயம் மவுண்ட்ரோடில் இருந்தது. காலை ஐந்து மணிக்குச் சைக்கிளில் வீட்டை விட்டுப் புறப்பட்டாரானால், மறுபடி அனந்து வீடு திரும்ப இரவு ஒன்பது, ஒன்பதரை மணிக்கு மேலாகி விடும்.

வீட்டில் கல்லூரிக்குப் போகிற நேரம் தவிர மற்ற நேரங்களில் இருக்கிறவள் சாரதா மட்டுந்தான். காலையில் அவளே சமைத்துச் சாப்பிட்டு விட்டுக் கல்லூரிக்கு ஓட