உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1030

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

வேண்டும். கூட்டத்தில் இடிபட்டுப் பஸ்ஸில் இடம் பிடித்துக் கமாண்டர் இன் சீஃப் சாலையிலுள்ள கல்லூரிக்கு நேரத்துக்குப் போயாக வேண்டும்.

அப்படிப் பரக்கப் பரக்கப் போகிற போதுதான் ஒரு நாள் பஸ்ஸில் அந்த வம்பு வந்து சேர்ந்தது. வம்பு ஒரு நாளோடு போகாமல் வாடிக்கையாக மாறிவிடவே, சாரதா வேதனைக்குள்ளானாள். தன்னை இத்தனை அழகாகவும், பிறருடைய கவனத்தைக் கவரும்படியும் படைத்த தெய்வத்தின் மேலேயே அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.

விளையாட்டாக ஆரம்பித்து, தொந்தரவாக மாறி, விபரீதமான எல்லைக்கு வந்திருந்தது அது. பஸ்ஸில் அரும்பு மீசையும், சுருட்டை முடியுமாகத் தமிழ்ச் சினிமாக் கதாநாயகனின் களையோடு ஒரு மாணவன் அவள் கையிலிருந்த புத்தகப் பையில் ஒரு கடிதத்தை மடித்துப் போட்டான். பஸ்ஸில் நாலு பேர் முன்னால் வீண் கலாட்டா வேண்டாமென்று முதல் நாள் பேசாமல் இருந்துவிட்டாள் சாரதா.

கல்லூரிக்குப் போய் அதைப் பிரித்துப் பார்த்தாள். அப்போது மிகவும் பிரபலமாகியிருந்த ஓர் இளம் சினிமா கதாநாயகியைப் போல் அவள் அழகாயிருப்பதாகப் புகழ்ந்து விட்டு அவளைத் தான் காதலிப்பதாக எழுதியிருந்தான் அந்த அசடு. அதைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்தெறிந்து விட்டு மறந்து போனாள் சாரதா. ஆனால், அவன் அப்படி அவளை மறந்து விடவில்லை என்பது மறுநாளும் சரியாக அதே நேரத்துக்கு அவன் பஸ் ஸ்டாண்டில் வந்து முளைத்ததிலிருந்து தெரிந்தது. இன்று முன்னை விடப் பெரிய கத்தையாக ஒரு கடிதம் வந்து சாரதாவின் பையில் விழுந்தது. சாரதா கோபமாக ஏதோ சொல்ல வாயைத் திறக்கு முன், அவன் பஸ்ஸின் முன் பக்கமாக விரைந்து நடந்து போய்க் கும்பலில் கலந்து கொண்டான்.

அவள் பையில் அவன் கடிதத்தைப் போடுவதைப் பக்கத்தில் நின்றிருந்த ஒரு நடுத்தர வயது மனிதரும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால், பார்க்காதது போல் இருந்து விட்டார். வரவரப் பெரிய நகரங்களில் தவறுகளை, ஆண்மையோடு தலையிட்டுக் கண்டிக்க முன் வரும் ஆண்பிள்ளைகளே இல்லையோ என்றுகூடச் சாரதாவுக்குத் தோன்றியது.

தங்களுக்குச் சம்பந்தமில்லாத நல்லதோ, கெட்டதோ எதிலும் பட்டுக் கொள்ளாமல் நடுவாகப் போய் விட வேண்டும் என்ற நாசூக்கு மனப்பான்மையில் நகரங்களில் முக்கால்வாசி ஆண் பிள்ளைகள் கோழைகளாக இருப்பதையும் அவள் கண்டாள். இரண்டாம் நாள் எழுதிய கடிதத்தில் ஒரேயடியாகப் பிதற்றியிருந்தான் அவன்.

“கண்ணே! சொந்தக் காரில் கல்லூரிக்குப்போகிற நான் உன் பொருட்டுப் பஸ்ஸில் ஏறி வந்து கால் கடுக்க அலைகிறேன். உனக்காக நான் படும் சிரமங்கள் ஏராளம்.

இன்று நாம் ஒரு திரைப்படம் பார்க்கப் போகலாமா? உன்னைக் காரிலேயே அழைத்துச் சென்று காரிலேயே பத்திரமாகக் கொண்டு வந்து விட்டு விடுகிறேன்” என்பதாக எழுதியிருந்தது அந்தக் கடிதத்தில்.