பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

664 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் வேண்டும் என்று எண்ணும்போதே, காலடியில் சுடுவது மாதிரி இருந்தது அவனுக்கு. தீக்குழியைப் பார்க்கும்போதே, இதிலா இறங்கி நடக்க வேண்டு’ மென்று மலைப்புத் தட்டியது.உடல் முழுவதும் வியர்த்துக்கொட்டியது.வெடவெடவென்று கை கால்கள் நடுங்கி உதறுவதுபோல் ஒரு பிரமை தோன்றியது. மூச்சுத் திணறுவதுபோல இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. தீக்குழியின் நுனியில் இத்தகைய எண்ணங்களுடன் தயங்கி நின்றான் அவன். வந்த வேகத்தில் எவ்வளவு ஆவேசம் இருந்ததோ, அவ்வளவு ஆவேசம் இறங்குவதில் இல்லை. . “ஏனய்யா? நீ தான் பெரிய சூரன் கணக்காப் பேசினாயே? இறங்கேன். எதுக்கு நிக்கிறே? பயமா இருக்குதோ?’ கூட்டத்தில் ஒருவன் குத்திக் காட்டிப் பேசினான்.அந்தச் சொற்கள் சுரீரென்று மனத்தில் தைக்கவே, வந்தது வரட்டும் செத்தாலும் சரி, பிழைத்தாலும் சரி என்று கண்களை இறுக மூடிக்கொண்டு வலது கால் பாதத்தைத் தீக்குழிக்குள் வைத்தான் இராஜகோபால். சித்திரவதை செய்யப்படுகிறவனின் முகத்தில் எவ்வளவு வேதனையைக் காணலாமோ, அவ்வளவு வேதனை அவன் முகத்தில் நிறைந்திருந்தது. மூன்று நான்கு அடி குழிக்குள் நடந்தும் விட்டான். நடந்து கொண்டிருக்கும்போதே, அவன் உடல் துவண்டது. கால்கள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டன. கண் இருண்டது. "ஐயோ! அம்மா! கால் போச்சே” என்று குரூரமான அலறல் அவன் தொண்டையிலிருந்து கிளம்பியது.பாதங்களை மேலும் கீழுமாகத் தூக்கித்தவித்தான். அடுத்த விநாடி அறுபட்ட கொடி துவண்டு விழுகிற மாதிரித் தீக்குழியின் நடுவில் மடேரென்று விழுந்துவிட்டான். பிரக்ஞை தவறிவிட்டது. 'ஐயையோ ஆ இதென்ன? கூட்டத்தில் குழப்பம் உண்டாயிற்று. கோவிலில் தீ மிதித்துவிட்டு வந்திருந்த இளைஞர்களில் இரண்டு பேர் உடனே குழிக்குள் தாவினர். கண்மூடித் திறக்கும் நேரத்தில் இராஜகோபாலின் உடல் மேலே கொண்டுவந்து சேர்க்கப்பட்டது. உடம்பு முழுதும் பறங்கி மொட்டுப்போல பெரிய பெரிய நெருப்புக் காயங்கள், கொப்புளங்கள், உடம்பைக் கண்கொண்டு பார்க்கச் சகிக்கவில்லை. "அடேய் ஒடுடா ஒடு ஒடிப்போய்ச்ச சுப்பையா வைத்தியரைக் கூட்டிக்கிட்டுவா" நாட்டாண்மைக்கார மூப்பனார் யாரையோ விரட்டினார்.தலைவர் தம்மைக் கவனிக்க ஆளில்லாமல் போகவே,தாமாகவே தம்முடைய காரில் ஏறிக்கொண்டுசொல்லாமலே கிளம்பிவிட்டார். பகுத்தறிவுப் படிப்பகத்து விடலைப் பிள்ளைகள் மூலைக்கொருவராகப் பிய்த்துக்கொண்டு போய்விட்டனர். கடைசியில் அங்கு மிஞ்சியவர்கள் நாட்டாண்மைக்கார மூப்பனாரும், அவரோடு வந்திருந்த துரோபதை அம்மன் கோவில் ஆட்களும்தான். .