இரண்டாம் தொகுதி : ஒரு வெறுப்பின் மறுபுறம்
1073
“-----விலே ஆர்ட் கிரிட்டிக்கா இருக்கார்.”
“அப்படிங்களா? எனக்குத் தமிழ் பேச வர மாதிரி, படிக்க வராது. இங்கிலீஷும் படிக்கிற பழக்கம் வரலே. தெலுங்கு மட்டும் எழுத்துக் கூட்டிப் படிப்பேன்.”
“---“
“ரொம்ப வணக்கமுங்க” உண்மையிலேயே பணிவாகத்தான் அவரை அவள் வணங்கினாள். படத்தில் பார்த்ததை விட நேரில் அதிரூப சுந்தரியாக விளங்கினாள் அவள். அதனால் ஏற்பட்ட மயக்கத்தை விட, அவள் தம் விமர்சனங்களையோ, தம்மையோ பற்றி அறிந்திராதவள் என்ற அதிர்ச்சியில் அயர்ந்தே போனார் வி.வி.ஜே.
அவளைப் பற்றி துணிந்து தாம் தம்மைச் சுற்றியிருக்கும் இளம் பத்திரிகையாளர்களிடம் அடித்து வைத்திருந்த 'டூப்’களை எல்லாம் அவர்கள் முன்னாலேயே தற்செயலாகப் பொய்யாக்கி விட்டாளே என்ற எரிச்சலும், கையாலாகாத் தனமானதொரு வெறுப்பும் மனத்தில் மூண்டன அப்போது.
அந்த அழகின் முன் அவர் மனமும், அவரும் குன்றிப் போவதைத் தவிர வேறு வழியில்லை. பத்திரிகை உலகில் அவரைப் போல ஜாம்பவனாக இருக்கும் ஓர் ‘ஆர்ட் கிரிட்டிக்’ இருப்பதே அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.
அவள் ‘ப்ளாங்க் செக்’ அனுப்பித் தம்மை ‘பர்ச்சேஸ்’ செய்ய முடியாதது பற்றியும், மகாபலிபுரத்துக்குத் தனியே உடன் வரக் கூப்பிட்டது பற்றியும் தாம் கற்பனை செய்து அளந்த கதைகளுக்காக வெட்கப்பட்டு, நண்பர்கள் முன்னால் அந்தக் கணமே தாம் செத்து விட்டது போல உணர்ந்தார் அவர்.
ஒரு செளந்தரியத்தை நிந்தாஸ்துதி செய்தே வேறொரு விதமாக வழிபட்டு வந்திருக்கும் பலவீனத்தின் விளைவாகக் கட்டி விட்டு மகிழ்ந்த கதைகள் அவரையே இப்போது கூனிக் குறுகிக் கூச வைத்தன. அவரையே திரும்ப வந்து தாக்கிப் புடைத்தன. ‘விமர்சகர் என்பவர் நடப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்க முயல்கிற ஒரு நொண்டி’ என்று யாரோ எங்கோ கூறியிருப்பது வி.வி.ஜே.க்கு நினைவு வந்தது இப்போது.
தமது வெறுப்பின் மறுபக்கச் சுவர் அப்போது மடமடவென்று சரிவதை அக் கணத்தில் அவரே உணர்ந்தார்.
யாருடைய மறைவுக்கோ துக்கம் கேட்க வந்த இந்த இடத்தில் தமக்குத் தாமே அந்தரங்கமாகத் துக்கம் கேட்டுக் கொண்டு உள்ளூற அழுது ஒப்பாரி வைக்க வேண்டும் போலிருந்தது அவருக்கு. ஆனால், வீம்பும் ஜம்பமும் அவரை அப்படி அழ விடாமல் இப்போதைக்குத் தடுத்துக் காப்பாற்றி வைத்தன.
(கலைமகள், தீபாவளி மலர், 198)
நா.பா. II - 29