147. ஹை பவர் கமிட்டி
ஜாதிக்காய் மலைத் தொடரில் வாழும் ;பகடர்’ என்னும் பழங்குடி இனத்தவர் பற்றித் திடீரென்று அரசாங்கத்துக்கு மகத்தான அக்கறை ஏற்பட்டிருந்தது.
“பகடர் இன நல்வாழ்வுக்கும், முன்னேற்றத்துக்கும் பாடுபடுவோம். அவர் தம் மொழியையும் கலாசாரத்தையும் கட்டிக் காப்போம்” என எல்லாத் தினசரிகளிலும் முதலமைச்சரின் படத்தோடு (பகடர்களின் படத்தோடு அல்ல) பெரிய பெரிய விளம்பரங்கள் வெளிவந்திருந்தன. -
சமூக சீர்திருத்தக்காரர்களும், ஆந்த்ரபாலஜிக்காரர்களும், ஸோஷியலாஜிஸ்ட்டுகளும், புகைப்படக்காரர்களும், பத்திரிகை நிருபர்களும் ஜாதிக்காய் மலைத் தொடருக்கு ஓடி அலைந்தார்கள். பத்திரிகைகளில் பகடர் இன ஆண், பெண்களின் படங்கள் தடபுடலாகப் பிரசுரமாயின. பகடர் வீடு, பழக்க வழக்கங்கள், கலாசாரம் பற்றிக் கட்டுரைகள் எல்லாம் பிரசுரமாயின.
பகடர் இன முன்னேற்றத்துக்காக அரசாங்கம் ‘ஹைபவர் கமிட்டி’ ஒன்றை நியமித்திருந்தது. மலை வாழ் மக்களும் பழங்குடி மரபினரும், பின் தங்கிய ஏழ்மை நிலையிலிருப்போரும், மக்கள் தொகை எண்ணிக்கையில் மிக மிகக் குறைந்து வருவோரும் ஆகிய பகடர்களின் வளர்ச்சிக்கானவற்றை அந்த ‘உயர் அதிகாரக் குழு’ உடனடியாகக் கவனித்து, ஆவன செய்ய வேண்டும் என ஏற்பாடாகியிருந்தது.
மலை ஜாதியினரான பகடர்களின் பசிப் பிணியையும் ஏழ்மையையும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் போக்குவதற்காக அமைக்கப்பட்ட ‘உயர் அதிகாரக் குழுவின்’ முதல் கூட்டம் தலைநகரில் ‘ஏஷியா இண்டர்காண்டினெண்டல்’ ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஏ.ஸி. கான்ஃபரன்ஸ் ஹாலில் ஆடம்பரமாக நடைபெற்றது.
ஹோட்டலின் ஏ.ஸி. கான்ஃப்ரன்ஸ் ஹாலில் பகடர் முன்னேற்றக் குழுவின் முப்பது உறுப்பினர்களும் சந்தித்தார்கள். கூட்டம் நெடுநேரம் நடந்தது. உறுப்பினர்களின் பகல் உணவு.மாலைக் காபி, சிற்றுண்டிஎல்லாம் ‘ஏஷியா இண்டர் காண்டினெண்ட’லிலேயேதான். முதல் கூட்டத்துக்கே ஹோட்டல் பில், உறுப்பினர் களின் டிஏ தினப்படி எல்லாம் ஒன்றே கால் லட்ச ரூபாய் செலவாயிற்று.
ஆறு ஏழு மணிநேர விவாதத்துக்குப் பின்னர் ஒரு குறிப்பிட்ட தீர்மானத்தைக் குழுவின் தலைவர் முன் மொழிந்த போது அதை அனைவரும் ஏகமனதோடு உடனே வரவேற்று ஒப்புக் கொண்டனர்.