பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

668 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

668 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் கோவிலுக்கு முன்னால் தரையில் குழி வெட்டி ஒரு பனைமரக் கம்பம் நடப்பட்டிருந்தது.கம்பத்தைச் சுற்றிலும் நன்றாகக் காய்ந்த ஒலைகளை அடர்த்தியாக வேய்ந்திருந்தார்கள். பெருமாள் கோவிலிலிருந்து புறப்பாடாகி வந்ததும், அதை முறைப்படிக் கொளுத்துவது வழக்கம். அதற்குத்தான் சொக்கப்பனை என்று பெயர்.

எனது குழந்தைப் பருவத்திலிருந்து இந்தக் கார்த்திகைச் சொக்கப்பனை கொளுத்தும் அதிசயத்தை எத்தனையோ தடவைகள் பார்த்திருக்கிறேன். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம் சிறு வயதிலிருந்தே உண்டு.

சமூகப் பழக்க வழக்கங்களிலோ, தெய்வீகத் தொடர்புடைய காரியங்களிலோ, நம்முடைய முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கும் எந்த ஒரு முறைக்கும் ஏதாவது அர்த்தம் இருக்கவேண்டும், அல்லது நிச்சயமாக இருக்க முடியும் என்று நம்புகிறவன் நான்.

கார்த்திகையன்று கோவில் வாசலில் பெருமாளுக்கு முன்பாகப் பனைமரக் கம்பத்தில் காய்ந்த ஒலைகளைக் கட்டிக் கொளுத்துவதிலும், அதற்குச் சொக்கப்பனை என்று பெயர் வைத்திருப்பதிலும் என்ன அர்த்தம் இருக்க முடியுமென்று புரியவில்லை எனக்கு.

புரியாவிட்டாலும் தெரிந்தவர்களிடம் கேட்டுப்புரிந்து கொள்ளவேண்டுமென்ற ஆசை உண்டு. இந்தக் காலத்தில் படிப்பையும், நாகரிகத்தையும், தங்களுக்கே சொந்தமென்று உரிமை கொண்டாடுகிற சிலர், தங்களுக்குப் புரியாதது எதுவும் உண்மையாக இருக்க முடியாதென்று சாதிக்கிறார்களே அவ்வளவு தன்னம்பிக்கை அடியேனுக்கு இல்லை.

யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று பல காலமாக நினைத்துக்கொண்டிருந்தும் இன்றுவரை அந்த வாய்ப்பு நேரவே இல்லை. இன்றைக்குத் திருவடியாப் பிள்ளையோடு சொக்கப்பனை பார்ப்பதற்குக் கிளம்பவே, அவரிடமே கேட்டுவிடலாமா என்று நினைத்தேன்.

இந்த மனிதர் திருவடியாப்பிள்ளைக்குப் பிறருடைய மனத்திலிருக்கும் நினைவை அறிகிற மந்திர வித்தை ஏதாவது தெரியுமோ, என்னவோ?

“சொக்கப்பனை கொளுத்தும் விழாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதிகமாகத் தண்ணிர் பெருக்கெடுத்து ஒடுவதையோ, அதிகமாக நெருப்புப் பிடித்து எரிவதையோ, வேடிக்கை பார்க்கும் மனநிலை சிறுவர்களுக்குத்தான் உண்டு! கடவுளுக்குக் கூட இந்த விளையாட்டு ஆசைகள் உண்டா?” என்று ஆராய்ச்சியுணர்வைக் கிளறிவிடும் நோக்கத்தில் கேட்பவர்போல் ஒரு கேள்வியைக் கேட்டார்.

“ஐயா! இதே கேள்வியை வேறு யாரிடமாவது கேட்கவேண்டுமென்று எனக்குப் பலநாட்களாக ஆவல் இருந்துவருகின்றது. நீங்களே விளக்கமாக விடைகூறிவிட்டால் நன்றாயிருக்கும்” என்றேன்.