பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————

இரண்டாம் தொகுதி/கார்த்திகைச் சொக்கப்பனை 🞸 669

பேசிக்கொண்டே இருவரும் கோவில் வாசலை நெருங்கிவிட்டோம். கோவில் வாசலில் முன் மண்டபத்துக் குறட்டில் உட்கார்ந்தோம். பெருமாள் வீதி ஊர்வலம் புறப்படுவதற்கு இன்னும் நிறைய நேரமிருந்தது. அதுவரை எதைப் பற்றியாவது பேசிப் பொழுதைக் கழிக்க வேண்டுமே? சொக்கப்பனை கொளுத்துவது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். நண்பர் திருவடியாப் பிள்ளை இருந்தாற் போலிருந்து, உண்மையின் ஆற்றலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார்.

“உண்மை அழிவதில்லை. நெருப்பைப் போலத் தன்னை அழிக்க முயலும் பொய்யைத் தான் அழித்துவிட்டு நிற்கிறது.”

“ஆ! அப்படிச் சொல்லுங்கள். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே கார்த்திகை நாளில் இந்தக் கோவில் வாசலில் காயாம்பூ அம்பலக்காரன் இதேபோல் தான் கூறினான். ஆனால், அப்போது இந்த ஊர் முழுவதும் அவனை நம்பவில்லை.”

“காயாம்பூ அம்பலக்காரனா? யார் அவன்? இப்படி முன்பின் தொடர்பில்லாமல் மொட்டையாகக் கூறினால், எனக்கென்ன தெரியும்? நான் கேட்டேன். என்னுடைய கேள்விக்குக் கிடைத்த விடை சுவாரஸ்யமானது.

“இந்த ஊரில் இந்தப் பெருமாள் கோவிலில் நடந்த சம்பவம்தான். கோவில் நந்தவனத்தில் பூக்களைக் கொய்து மாலை கட்டிக் கொடுக்கும் பண்டாரமாக இருந்தான் காயாம்பூ. அந்தக் காலத்தில் பெருமாள் கோவிலில் பண்டாரத்துக்குச் சில தனிப்பட்ட மரியாதைகள் உண்டு. அந்த மரியாதைகளையும், சிறப்புக்களையும் ஏற்றுக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு மட்டும்தான்.

அவற்றில் திருக்கார்த்திகையன்றைக்குப் பெருமாளுக்கு முன் சொக்கப்பனை கொளுத்தும் மரியாதையும் ஒன்று. அர்ச்சகர் கையால் பண்டாரத்துக்கு மாலை, பரிவட்டம் முதலிய மரியாதைகளைச் செய்தபின், அகல் விளக்கைப் பொருத்தி, முறைப்படி அந்தச் சொக்கப்பனையைக் கொளுத்தும் உரிமை பண்டாரத்தைச் சேர்ந்தது. காயாம்பூவுக்கு இந்தத் திருக்கார்த்திகை மரியாதை தனக்குக் கிடைப்பதில் தனிப்பெருமை. சொக்கப்பனை எரியும் காட்சியைப் பார்ப்பதற்காக ஊரே கோவில் வாசலில் கூடியிருக்கும் சமயத்தில், ஊருக்கு முதல்வரான பெருமாளுக்கு முன்னால் அந்தக் காரியத்தைச் செய்பவன் பெருமைப்பட வேண்டியதுதானே?

வருடம் தவறாமல் காயாம்பூ அம்பலக்காரனுக்குக் கிடைத்து வந்த இந்தப் பெருமை, அந்த வருடம் சிறுமையாக முடிந்துவிட்டது. சந்தர்ப்பத்தின் கோளாறோ, அல்லது அவனுடைய பொல்லாத வேளையோ, எதிர்பாராத விதத்தில் அப்படி ஒரு விபரீத நிகழ்ச்சி நடந்துவிட்டது. ஒருவரா? இருவரா? அல்லது நாலைந்து பேர்களா?ஊர் முழுவதுமே ஒரே குரலாக அந்தப் பழியைக் காயாம்பூவின் மேல்தான் சுமத்தியது.

நடந்தது இதுதான் வழக்கம்போல் அந்தத் திருக்கார்த்திகையின் போதும் பெருமாள் புறப்பாடாகி நான்கு மாட வீதிகளையும் சுற்றிவிட்டுக் கோவில் வாசலில் சொக்கப்பனைக்கு முன்வந்து நின்றார். முன்பெல்லாம் இப்போது போடுவதைவிடப்