பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

670 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

பெரிய சொக்கப்பனையாகப் போட்டிருப்பார்கள். கிட்டத்தட்ட ஒரு கோபுரம் தரையிலிருந்து எழுப்பப்பட்டது போல இருக்கும். பனையின் உச்சிவரை ஏறிச் செல்லுவதற்கு வசதியாக உட்புறத்தில் மூங்கில் சட்டங்கள் கொடுத்துக் கட்டியிருப்பார்கள். சொக்கப்பனையைக் கொளுத்துவதற்கு முன்னால் பண்டாரம் பனை மரத்து உச்சியில் ஏறித் தீபத்தை வைத்துவிட்டு வரவேண்டும். அவன் கீழே இறங்கி வந்தபின்புதான் சொக்கப்பனையின் அடிப்பாகத்தில் கொளுத்துவார்கள். அந்த வருடம் காயாம்பூவின் சத்தியத்தைச் சோதிப்பதுபோல் அது நடந்துவிட்டது.

ஒவ்வொரு நாள் காலையிலும் குடலையில் புதிய பூ மாலைகளைக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு, அதே குடலையில் பழைய மாலைகளைக் கழித்து வாங்கி வருவான் காயாம்பூ. விடிவதற்கு முன்பே பூக்களை எடுத்துத் தொடுத்துத் திருப்பள்ளியெழுச்சியின்போதே கொண்டுபோய்ச் சந்நிதியில் மாலைகளைக் கொடுத்துவிடுவான். திருக்கார்த்திகை அன்றைக்குக் காலையிலும் வழக்கப்படியே சந்நிதியில் மாலையைக் கொடுத்துவிட்டுப் பழைய மாலைகளோடு திருப்பிக் கிடைக்கும் பூக்குடலைக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

அந்த நாளில் கோவில்களுக்குள்ளே மின்சார விளக்கு ஏது? எண்ணெய்த் தீபங்களின் மங்கிய ஒளிதான். அர்ச்சகர் காயாம்பூவின் பூக்குடலைக்குள் பழைய மாலையைக் கழற்றி வைக்கும்போது பெருமாளின் கழுத்தில் அணிந்திருந்த தங்கப் பதக்கம் ஒன்றும் சேர்ந்து, குடலைக்குள் இடம் பெற்றுவிட்டது. வேலை அவசரத்தில் அர்ச்சகர் அதைக் கவனிக்கவில்லை. காயாம்பூவும் பூக்குடலையை வாங்கிக் கொண்டு நந்தவனத்துக்குத் திரும்பிவிட்டான்.

பெருமாளுக்குச் சார்த்திக் கழித்த பழைய மாலைகளை யார் காலிலும் மிதிபடாமல் நந்தவனத்தின் மூலையிலுள்ள பள்ளத்தில் போட்டுவிடுவது வழக்கம். காயாம்பூ,பழைய மாலையைத் திருப்பிக்கொண்டு வந்ததும் அவன் மூத்த மகன் நாகலிங்கம்தான் குடலையை எடுத்துப்போய்ப்பள்ளத்தில் கவிழ்த்துவிட்டு வருவான்.

அன்று பழைய மாலையைப் பள்ளத்தில் கொட்டியதும் மாலையோடு சேர்ந்து ஏதோ மினுமினுப்பதைக் கண்டு சிறிது தயங்கி நின்றான் நாகலிங்கம். வழக்கமாக மாலையில் வைத்துக் கட்டும் ஜிகினாப்பட்டையாக இருக்கும் என்று முதலில் அலட்சியமாகப் பார்த்தவன், கண்களை அகல விரித்தான். பள்ளத்திற்குள் இறங்கி மாலையில் சிக்கிக் கொண்டிருந்த அந்தப் பொருளைத் தனியே பிரித்தெடுத்தான். பெருமாளின் தங்கப்பதக்கம் மின்னல் துணுக்கெனப் பிரகாசித்தது அவன் கையில் பெருமாளுக்குச்சார்த்தும் பூமாலை, பச்சைக் கற்பூரம், சந்தனம், பன்னீர் ஆகியவற்றின் வாசனை அந்தத் தங்கப் பதக்கத்தையும் சார்ந்திருந்ததால், மணம் அவன் நாசியைத் துளைத்தது.

ஊர்ச் சாவடியில் மூன்று சீட்டு விளையாடுவதும் நாளொன்றுக்கு எத்தனை காட்சி உள்ளுர் சினிமாக் கொட்டகையில் உண்டோ, அத்தனை காட்சிகளையும் பார்த்து விடுவதும்தான் நாகலிங்கத்தின் அன்றாடச்செயல்கள். அந்த இருபத்திரண்டு