பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83.அத்தியூற்று

பாரஸ்டு கார்டு பரசுராம் துப்பாக்கியைத் தோளில் மாட்டிக்கொண்டு தைரியமாக முன்னே சென்றார். நாங்கள் பயந்துகொண்டே அவரைப் பின்பற்றி நடந்தோம்.

மேற்கு மலைச் சிகரங்களில் கதிரவன் மறையும் காட்சி மனோரம்மியமாக இருந்தது. ஆனால், எங்களுக்கு இருந்த நடுக்கத்தில் அழகை நாங்கள் ரசிக்க முடியவில்லை. நாங்கள் நடந்துகொண்டிருக்கும் போதே தொலைவில் எங்கோ யானைகள் பிளிரும் ஒலி, பசியால் குரூரமாக உறுமிக் கொண்டிருக்கும் புலி ஒன்றின் குரல் இவைகளைக் கேட்டோம்.

“பரசுராம் ஸார்! கொஞ்சம் வேகமாக நடப்போம். எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது. இருட்டுவதற்குள்ளேயாவது நாம் ‘ரெஸ்ட் ஹவு’ஸில் இருக்க வேண்டாமா?” நான், பயப்படும் எங்கள் கோஷ்டியினரின் சார்பாகப் பரசுராமனிடம் இந்தப் பிரேரணையை வெளியிட்டேன்.

“ஏன் ஸார், வீணாகப் பதறுகிறீர்கள்? துப்பாக்கியே இல்லாமல் நடு ராத்திரியில் வெட்டரிவாளோடு அத்தியூற்றுக் கரைக்குப் போய்க் கரடிக் கும்பலுக்கு நடுவே தைரியமாக வெற்றி வாகை சூடி வந்தான் ஒரு சின்ன முத்துப் பண்டாரம். அவனும் நம்மைப்போல் ஒரு சாதாரண மனிதன்தான்.அவனோடு பந்தயம் போட்டுத் தோற்றுப் போய் 50 ரூபாயை எண்ணிக் கொடுத்தோம். அப்போது _ அந்த ராத்திரியில் இவன் செய்த தீரச் செயல்களை இப்போது நினைத்தாலும் சதை ஆடுகிறது.நாமும் மனிதர்கள் தாமே?” பரசுராம் இப்படி எனக்கு ஆறுதல் கூறவும், சின்னமுத்துப் பண்டாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டாயிற்று.

நான் பயத்தை மறந்து பரசுராமைத் தூண்டினேன். ரெஸ்ட் ஹவுஸிற்குப் போனவுடன் கூறுவதாக ஒப்புக் கொண்டார் பரசுராம். எல்லாருமே வேகமாக நடந்தோம்.

நாங்கள் ‘ரெஸ்ட்ஹவு’ஸை அடையும்போது மணி ஆறரை ஆகியிருந்தது.அங்கே பரசுராம் செய்திருந்த ஏற்பாட்டின்படி, ஒரு காட்டிலாகா வேலையாள் தேநீர் தயாரித்து வைத்திருந்தான். பலாச்சுளைகளை உட்கொண்டு தேநீர் பருகினோம். நாங்கள் பரசுராமைச் சுற்றி உட்கார்ந்ததும் அவர் சொல்லத் தொடங்கினார்.

ங்கள் பாரஸ்ட் ஏரியாவுக்கு அத்தியூற்று ஏரியா என்பது பெயர் ஏரியாவிலேயே முக்கியமானதும் சர்க்காருக்கு அதிக வருமானத்தைக் கொடுக்கக் கூடியதுமான இடம் அத்தியூற்று.