பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

628 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பலா மரங்கள் இருக்கக்கூடிய அத்தியூற்றுக் கரையைப் பற்றியோ நான் சொல்ல வேண்டியதே இல்லை.அது நீங்களே பர்த்த இடம்தானே? பயங்கரமான பள்ளத்தாக்கு அது எவ்வளவு கரடிகள் இந்த மலைத்தொடரில் உண்டோ, அவ்வளவு கரடிகளும் பலாப்பழக் காலம் வந்து விட்டால் அத்தியூற்றுக் கரைக்கு வந்துவிடும்.

இதனால் சர்க்காரிடமிருந்து பலாமரங்களைக் குத்தகைக்கு எடுப்பதற்கு எவரும் முன் வருவதற்குத் தயங்கினார்கள். அந்த வருடம் சர்க்காருடைய அதிர்ஷ்டமோ, அல்லது கரடிகளுடைய துரதிர்ஷ்டமோ தெரியவில்லை, பலாத் தோப்பு முழுவதும் ஒரு கணிசமான தொகைக்கு ஏலம் போயிற்று.

மலையடிவாரத்தில் கான்சாபுரம் என்று ஒரு ஊர் இருக்கிறது பாருங்கள்! அந்த ஊரைச் சேர்ந்த வேல்சாமித் தேவர் என்பவர் குத்தகையைத் துணிந்து எடுத்திருந்தார்.

சின்ன முத்துப் பண்டாரம் இந்த மலைப் பிராந்தியத்தில் தலை சிறந்த வேட்டைக்காரன். வேல்சாமித் தேவருக்கு வலதுகை என்றே அவனைச் சொல்லலாம். அவ்வளவு நெருக்கமான பழக்கமும் விசுவாசமும் தேவரிடம் அவனுக்கு உண்டு. வேல்சாமித் தேவருடைய குத்தகையை லாபகரமாக நிறைவேற்றி வைப்பதற்குத் தன்னால் ஆன உதவிகளையெல்லாம் செய்வதாக வாக்களித்திருந்தான்.

பலா மரங்கள் பண்டாரத்தின் காவலில் இருக்கின்றன என்ற செய்தியே, பலாப்பழம் திருடவருகிறவர்களைச் சரியானபடி எச்சரித்துத் தடுத்துவிட்டது. மனித உருவில் வருகிற இந்தத் திருடர்களின் தொல்லை ஓய்ந்திருந்தாலும் அதைப் போல் நான்கு மடங்கு தொல்லையைக் கரடிகள் கொடுத்தன. பகல் முழுவதும் தன்னுடைய வேட்டைத் திறமையினாலும் வெடிச்சத்தங்களாலும் அவற்றைத் துரத்திப் பலாப் பழங்களைப் காப்பாற்றிவிட்டான் சின்னமுத்துப் பண்டாரம். இரவிலும் ஒரு பெரிய வாகை மரத்தில் பரண் கட்டிக்கொண்டு, கரடிகள் வருகிற அறிகுறி தென்படும் போதெல்லாம், வெடிச் சத்தத்தைக் கிளப்பியும் குரல் கொடுத்தும் விரட்டி வந்தான். இருந்த போதிலும், பழங்களில் சிலவற்றைக் கரடிகள் நாள் தவறாமல் சிதைத்துக் கொண்டேதான் இருந்தன.

ஆனால், அந்தச் சிதைவினால் தேவருடைய குத்தகைக்குச் சிறிதும் நஷ்டம் ஏற்படாமல் பாதுகாத்து விட்டான் சின்னமுத்து. பலாப்பழக் காலம் தொடங்கியபின், முதல் மாத விற்பனையிலேயே குத்தகை பேசிய அசல் தொகை தேறிவிட்டது தேவருக்கு.

இந்தச் சமயத்தில்தான் எங்கள் இலாகா இன்ஸ்பெக்க்ஷனும் வந்தது. அன்று மாலை மூன்று மணிக்கு நானும் இன்ஸ்பெக்ஷனுக்காக வந்திருந்த, ஏற்கனவே எனக்குப் பழக்கமான இன்ஸ்பெக்டரும் அத்தியூற்றுக் கரையில் சில இடங்களைப் பார்வையிட்டவாறே நின்று பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது சின்னமுத்துப் பண்டாரம் பின்தொடர வேல்சாமித் தேவர் அங்கே வந்தார் நான் தேவரை வரவேற்று இன்ஸ்பெக்டருக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.