பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி/அத்தியூற்று * 629

சின்னமுத்துப் பண்டாரத்தின் வேட்டைத் திறமையைப் பற்றியும் அவரிடம் சிலாகித்துக் கூறினேன்.

சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே நடந்த நாங்கள் நால்வரும், பலாப்பழக் காவல் நிமித்தம் இரவில் தங்குவதற்காக மரத்தின் உச்சிக் கிளைகளுக்கிடையே பண்டாரம் பரண் போட்டிருந்த வானளாவிய வாகை விருட்சத்தின் பக்கமாக வந்து சேர்ந்திருந்தோம். கரடிமேலே ஏறமுடியாதபடி அந்த வாகைமரத்தைச்சுற்றி ஆழமான குழி வெட்டப்பட்டு, குழிக்குள் முள்ளுக் கிளைகளை வெட்டிப் போட்டிருந்தார்கள். குழியைத் தாண்டி மரத்தின் அடிப்பகுதியை அடைய ஒரு பனை முண்டு இடப்பட்டிருந்தது. பண்டாரம் பரணில் ஏறிக் கொண்டதும் அந்தப் பனை முண்டுப் பாலத்தை நீக்கிவிடுவானாம்.

அந்த மரத்துக்கு அருகே கீழே ஒடும் அத்தியூற்றுக் கால்வாயின் குளிர்ந்த நீர்ப்பரப்பில் காலை இட்டுக்கொண்டே நாங்கள் மூன்று பேரும் பாறை ஒன்றில் அமர்ந்தோம். சின்னமுத்துப் பண்டாரம் மரியாதைக்காக அடக்க ஒடுக்கத்தோடு கை கட்டிக் கொண்டு பவ்வியமாக அருகில் நின்றான்.

காட்டிலாகா இன்ஸ்பெக்டர் தேவரிடமும் என்னிடமும் வேட்டையாடும் விதங்களைப் பற்றியும், ஆங்கிலத்தில் வனமிருகங்களோடு வேட்டைக்காரர்கள் போராடும் காட்சிகளை மயிர் சிலிர்க்கும்படியான சினிமாப் படக்காட்சிகளாக எடுப்பதைப் பற்றியும், கதை கதையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ஜங்கிள் கிங் என்ற ஒர் ஆங்கிலப் படம், ஸார் போனமாசம் ரீகலில் ஓடியது. அதிலே பாருங்கள், ஒரு பயங்கரமான காட்சி. காட்டில் எட்டுப் பெரிய கரடிகளுக்கு நடுவே ஒரே ஒரு வீரன் நின்று போராடுகிறான். என்ன அற்புதமாக எடுத்திருக்கிறான்! தத்ருபம் என்றால் தத்ரூபம்தான்,போங்க” இன்ஸ்பெக்டர் சொல்லி வாய்மூடவில்லை. “அதிலென்னங்க ஆச்சரியமிருக்குது? இங்கே மலங்காடுங்களிலே எத்தனையோ நாள் கரடி மந்தைங்களையே தனி ஆளாயிருந்து சமாளிச்சு மீண்டும் வர்ரதுண்டுங்களே!” சின்னமுத்துப் பண்டாரம் பெருமிதம் தொனிக்கும் குரலில் கூறினான்.

“சும்மா எங்கிட்டே உருட்டாதே, மேன்! இங்கேதான் பலாப் பழத்துக்குக் கரடிகள் கூட்டம் கூட்டமாக வருமே? இன்று இரவே உன்னால் நிரூபித்துக் காட்ட முடியுமா? நீ கரடிகளோடு போராடுவதை இங்கு வாகை மரத்துப் பரண் மேலிருந்து நாங்கள் பார்ப்போம். நீ சொன்னபடி செய்து மீண்டும் வந்தால் நான் உனக்கு ஐம்பது ரூபாய் தருகிறேன்.இல்லையானால், நீ எனக்கு ஐம்பது ரூபாய் தரவேண்டும்! சம்மதமா? சம்மதமானால் பேசு சும்மா வாயளப்பு வேண்டாம்” ஆத்திரத்தோடு சின்ன முத்துப் பண்டாரத்தை விரட்டிப் பார்த்தார் இன்ஸ்பெக்டர்.

ஆனால், அவனோ அதற்கும் அசரவில்லை. "ஓ! இப்பவே இன்னிக்கிராத்திரியே தயாருங்க. பந்தயமா நீங்க சொன்னதுபோல அம்பது ரூவா வச்சுக்குங்க. இதோ, இந்த