158. குணம் நாடிக் குற்றமும் நாடி..
காலையிலிருந்து வந்த டெலிபோன் கால்கள் எல்லாம் மணிக்குத் தான். தேடி வந்தவர்களில் பலரும் அவனைத்தான் தேடி வந்து விட்டுப் போயிருந்தார்கள். டாக்டர் சாமிநாதனுக்கு எரிச்சலாக மட்டுமில்லை, பொறாமையாகவும் இருந்தது. அங்கு வந்த சில நாட்களிலேயே மணி எல்லோரையும் கவர்ந்து விட்டான். அவன் ஒரு கால் மணி நேரம் காணவில்லை என்றாலும், மற்றவர்கள் அவனை விசாரிப்பது அதிகமாயிருந்தது. அவனைத் தேடுவது மிகுதியாயிருந்தது.
இந்த அறுபத்தேழு வயதில் தனக்கு ஏற்படாத உறவுகளும், நெருக்கமும், பப்ளிக் ரிலேஷனும் இருபத்து ஏழு வயதில் அவனுக்கு ஏற்பட்டிருப்பது போல் தோன்றியது. வந்து போகிற ஆட்களையும், பழகுகிற மனிதர்களையும் எப்படியோ சொக்குப் பொடி போட்டு மயக்கினாற் போல மயக்கியிருந்தான் அவன்.
இவ்வளவிற்கும் மணி அங்கே வந்து சேர்ந்து முழுமையாக மூன்று மாதங்கள் கூட முடியவில்லை. யாரிடமும் இவர் அந்நியர் புதியவர் என்று வித்தியாசமோ, மருட்சியோ இன்றி சகஜமாக உடனே ஒட்டிக் கொள்ள அவனால் எப்படி இயல்பாக முடிகிறது என்று ஆச்சரியமே அடைந்தார் அவர்,
அறிவின் உச்சியிலிருந்து அவர் சாதிக்க முடியாத பல காரியங்களை உணர்வின் கனிவினால் அவன் சுலபமாகச் சாதித்தான்.
‘இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பேரிட்டிவ் ஸ்டடீஸ்’ - வரலாற்றிலேயே இப்படி ஒரு மாணவனை அவர் பார்த்ததில்லை. பயந்தபடியே குனிந்த தலை நிமிராமல் வருவார்கள். முப்பத்தாறு மாதம் எப்பொழுது முடியப் போகிறதென்று எண்ணிக் கொண்டிருந்து விட்டுத் தீஸிஸை ஸப்மிட் செய்து முடிப்பார்கள். கருமமே கண்ணாயினார் என்பது போல் காரியத்தில் மட்டுமே கண்ணாயிருப்பார்கள், சமயங்களில் முடுக்கி விட்ட இயந்திரங்களைப் போல் நடந்து கொள்வார்கள். தப்பித் தவறி ஒரு புன்முறுவல் பூத்தால்கூட ரிஸர்ச்சின் சீரியஸ்நெஸ் கெட்டு விடுமோ என்று பயந்து சிரிப்புக்குப் பஞ்சம் வந்தாற் போல் தோன்றுவார்கள். டாக்டோரல் கமிட்டியின் கேள்விக் கணைகளிலிருந்து தப்பி மெத்தடாலஜி டெஸ்ட் முடித்துக் கொள்ளப் பறப்பார்கள். மணியும் அவற்றுக்காக அநாயாசமாக உழைத்தான். ஆனால், அநாகரிகமாகவும், அருவருப்பாகவும் அவசரம் காட்டவில்லை. டாக்டர் சுவாமிநாதன்தமது பேராசிரிய வாழ்க்கையில் இப்படி ஒரு ரிஸர்ச் மாணவனைச் சந்திக்க நேர்ந்ததே இல்லை. எதைப் பற்றியும், அது நடக்காது என்ற அவநம்பிக்கை அவனுக்கு இராது போலத் தோன்றியது. எதையும் ஒரு தீர்க்கமான நம்பிக்கையோடு அணுகுவதற்குப் பழகியிருந்தான் அவன். நம்பிக்கை உள்ளவர்களால் எதையும் இப்படிச் சுறுசுறுப்பாகச் செய்ய முடியும் போலிருக்கிறது.