பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

674 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

“ஏண்டா திருட்டுக் கழுதை சாமி நகையைக் கொண்டு போய் விற்றுச் சாப்பிட வேண்டும் என்கிற அளவுக்கு எப்போதடா உனக்குத் துணிச்சல் வந்தது?” கூப்பாடு போட்டுக் கொண்டே அவ்வளவு பெரிய கூட்டத்துக்கு நடுவில் காயாம்பூவை அடிப்பதற்குக் கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்துவிட்டார் தர்மகர்த்தா.

“ஆத்திரப்படாதீர்கள்! முதலில் விஷயத்தை இன்னதென்று விசாரியுங்கள்” என்று பக்கத்திலிருந்தவர்கள் குறுக்கிட்டுத் தடுத்திருக்காவிட்டால், அந்த அறை காயாம்பூவின்மேல் விழுந்தே இருக்கும்.

இரத்தினப் பத்தர் முன்னால் வந்து காயாம்பூ அம்பலக்காரனிடம் விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னார்.“ஐயா! நான் ஒரு பாவமும் அறியேன். குடலைக் குள்ளிருந்த பழைய மாலைகளை நந்தவனத்திற்குப் போனதும் என் மகனிடம் கொடுத்துப் பூங்கிடங்கில் கொட்டி வரச் செய்தேன். அந்தப் பயல் போக்குச் சரியில்லை. விடலைத்தனமாக ஏதோ செய்திருக்கிறான். எனக்குத் தெரிந்திருந்தால், இப்படியெல்லாம் நடக்கவிட்டிருக்க மாட்டேன். உடனே ஒடிவந்து அர்ச்சகரிடம் கொடுத்திருப்பேன்” என்று பதறிக் கூறினான் காயாம்பூ.

“சரிதான் அப்பா யாரிடம் கதை அளக்கிறாய் நீ? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் நீயே இந்தப் பதக்கத்தை உன் மகனிடம் கொடுத்து, என்னிடம் விற்றுப் பணம் வாங்கிக்கொண்டு வரச் சொன்னதாக உன் மகன் வந்து சொன்னான். நீ அதற்குள் உனக்கு ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாடி என்னிடம் மறைக்கிறாயே! இந்த ஏமாற்று வேலை எல்லாம் இங்கே பலிக்காது” என்று பத்தர் கொதிப்போடு கூறினார்.

“ஐயா! சாமி சாட்சியாகச் சொல்கிறேன். உண்மையில் எனக்கு இது தெரியவே தெரியாது” என்று அழமாட்டாக் குறையாகக் கெஞ்சினான் காயாம்பூ.

“சீ!அயோக்கியப் பயலே வேஷமா போடறே” தர்மகர்த்தா பளிரென்று அவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.

அவ்வளவு பெரிய கூட்டத்துக்கு நடுவே அடிபட்ட காயாம்பூ, “இந்தச் சாமிக்கு கண் இருந்தால், இந்த நெருப்பு நெருப்பாக இருந்தால், உண்மையைக் காண்பிக்கவேனும்” என்று ரோஷம் பீறிட இரைந்து சப்தமிட்டான்.

அதற்குமேல் காயாம்பூவை அங்கே நிற்கவிடாமல் போலீஸ்காரர்கள் பிடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டனர். “திருட்டுத் தடியன்! இப்படிப்பட்ட ஆட்களெல்லாம் கோவிலில் வேலை செய்தால் கோவில் உருப்பட்டாற் போலத்தான்” என்று தர்மகர்த்தா காயாம்பூவைப் போலீஸார் பிடித்துக்கொண்டு போன பின்பும் ஆத்திரம் அடங்காமல் உறுமினார்.

இப்படி அந்த வருடம் சொக்கப்பனை உற்சவம் அலங்கோலமாக முடிந்து விட்டது. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஜாமீன் கொடுத்துவிட்டு ஓடி வந்தான் காயாம்பூ, ஆயிரமிருந்தாலும் பெருமாளுக்கு வழக்கமாகத் தான் செய்யும் கைங்கரியத்தைச் செய்யாமல் விட மனமில்லை அவனுக்கு.