பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————

இரண்டாம் தொகுதி/கார்த்திகைச் சொக்கப்பனை 🞸 675

ஆனால், அவன் இன்ஸ்பெக்டரிடம் வாதாடி ஏற்ற நபர் மூலம் ஜாமீன் கொடுத்துவிட்டு வருவதற்குள் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு விட்டது. உரிமையையும் மரியாதையையும் இழந்ததோடல்லாமல், திருடாமலே திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட அவன் மனம் குமுறியது.

“ஆண்டவனே! நியாய தேவதைக்குக் கண் அவிந்து விடவில்லையானால், என் முறையீட்டுக்கு நியாயம் கிடைக்கட்டும். நான் திருடவில்லை என்பது உண்மையானால், இனி இந்த இடத்தில் எந்த வருடம் சொக்கப்பனை கட்டி நிறுத்தினாலும், அது எரியவே கூடாது.என் சத்தியத்துக்கு அது அடையாளம்” என்று கோவிலை நோக்கித் தெருப் புழுதியை வாரி இறைத்துவிட்டு, எரிந்துகொண்டிருந்த சொக்கப்பனை நெருப்பிற்குள் பாய்ந்துவிட்டான், காயாம்பூ.

அவனைத் தடுப்பதற்கு அங்கு நின்ற யாருக்கும் தோன்றவில்லை.“ஐயோ, அம்மா” என்று பயமும் திகைப்புமாகக் கூச்சலிட்டார்களே ஒழியத் தீக்குள் புகுந்து அவனை மீட்க யாரும் முன்வரவில்லை. கடைசியில் சொக்கப்பனையின் ஜுவாலைகள் வேகம் அடங்கித் தணிந்த போதுதான் காயாம்பூவின் உடலை வெளியேற்ற முடிந்தது. அந்த உடல்? அது வெறும் உடலாகத்தான் இருந்தது. மறுநாள் அப்பனைச் சுடுகாட்டில் அடக்கம் செய்துவிட்டு வந்த பின், நாகலிங்கம் உண்மையை வெளியிட்டுக் கதறினான். ஆனால், அப்போது அந்த உண்மை வெளி வந்துதான் என்ன பயன்? ஒரு நல்ல மானஸ்தனை அவமானப்படுத்திக் கொல்வதற்கு முன், அது வெளிவந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்?

மாம். காயாம்பூஏதோ சாபம்கொடுத்தான் என்றீர்களே? அந்தச்சாபத்திற்குப் பிறகு சொக்கப்பனை எரியவே இல்லையா?” என்று கேட்டேன் நான்.

“அதையேன் கேட்கிறீர்கள்? அவன் இறந்த வருஷத்திற்கு அடுத்த வருஷம் திருக்கார்த்திகையன்று ஒரே அடை மழை சொக்கப்பனை வெள்ளத்தில் மிதந்தது. அதற்கடுத்த வருடம் பனையில் தீபம் வைப்பதற்கு ஏறியவன், உச்சியிலிருந்து கீழே விழுந்து சொக்கப்பனை கொளுத்தப்படாமலே அமங்கலமாக முடிந்தது. மூன்றாம் வருஷம் காற்றுச் சகிக்க முடியாமல் வீசிக் கட்டி வைத்திருந்த சொக்கப்பனை மரத்தையே கீழே சாய்த்துவிட்டது.

“அப்படியானால் இப்போது எரிகிறதே?” என்று குறுக்கிட்டுக் கேட்டேன்.

“இதுவா? இது வேறு இடம் முன்பு சொக்கப்பனை கொளுத்திய இடத்திலிருந்து இருபதடி தள்ளிப் பனை நிறுத்தி, இப்போது சில வருஷங்களாகக் கொளுத்தி வருகிறார்கள். அந்தப் பழைய இடத்தில் கொளுத்த முயன்றால், கடைசி விநாடியிலாவது ஏதேனும் அபசகுனம் ஏற்பட்டு நின்று போகிறது” என்றார் திருவாடியாப் பிள்ளை.

“பிள்ளை அவர்களே உண்மைநிகழ்ச்சிகள் காலப்போக்கில் அழிந்து விடுகின்றன. இன்னும் சிலவோ காலத்தின் போக்கையே அழித்துவிடுகின்றன. உங்கள் காயாம்பூ இரண்டாவது வகையில் இடம் பிடித்துவிட்டான்” என்று பெருமிதத்தோடு சொன்னேன் நான்.

(1963-க்கு முன்)