89. சிவானந்தம் ஒரு 'ஜீனியஸ்’
சிவானந்தம் அவர்களை எப்போது எங்கே எதற்காக முதன் முதலில் சந்தித்தேன் என்பது இப்போது எனக்குச் சரியாக நினைவில்லை. ஆனால் அவரைச் சந்தித்ததும், பின்பு அந்தச் சந்திப்பை நான் மறக்க முடியாமற் போனதும் நன்றாக நினைவிருக்கிறது. 'சிவானந்தம் ஒரு ஜீனியஸ்’ என்பது இங்கே என் ஒருவனுடைய அபிப்பிராயம் மட்டுமில்லை. சிவானந்தத்தைப் பொறுத்த மட்டும் அவர் ‘ஒரு ஜீனியஸ்' என்பதை ஒப்புக் கொள்ளாதவர்களே கிடையாது. அப்படி ஒப்புக் கொள்வதனால் யாவருக்கும் எந்தவிதமான நஷ்டமுமில்லை. இலாபம் உண்டா இல்லையா என்பது அநாவசியமான ஆராய்ச்சி. நஷ்டமில்லை என்பதுதான் முக்கியம். பிறரைப் புகழ்ந்தாலும், நமக்கு நஷ்டமில்லாமல் புகழ வேண்டும். அதுதான் நவீன யுகத்தில் மிகப் பெரிய தந்திரம். இந்தத் தந்திரம் தெரிந்தவர்கள் அதிகமாக இருக்கிற ஒர் ஊரில்தான் சிவானந்தமும் இருந்தார். அது எந்த ஊராக இருந்தால் என்ன?
அதோ, ஏழு மைல் இடுப்பொடிய ரிக்ஷா இழுக்க வைத்து விட்டு காலணாவை எண்ணிக் கொடுக்கும் பணக்காரக் கஞ்சனிடம் சண்டை போடுகிற ரிக்ஷாக்காரனுக்கு ஆதரவாக மூன்றாவது குரல் ஒன்று வியவகாரம் பேச வருகிறதே - அதுதான் சிவானந்தத்தின் குரல். மேலத் தெருக் கோடியில் தனியாகத் தண்ணீர் எடுக்கச் சென்ற தமயந்தியைப் பார்த்துக் கண்ணை வெட்டித் ‘தன்னந்தனியே போறவளே’ என்ற ட்யூனில் ஸீ ட்டியடித்த காளையை, ‘நீ அக்கா தங்கச்சியோடப் பொறந்தவன் தானாடா?’ன்னு அழுத்தமாக ‘டா’ன்னு போட்டு விசாரிக்கிற குரல் இருக்கிறதே, அதுவும் நம்முடைய சிவானந்தம் அவர்களுடையதுதான். தயவும், கருணையும் கிடைக்காமல் வாழக் கஷ்டப் படுகிறவர்கள் யார், யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் சிவானந்தம் ஒரு நம்பிக்கை. அவருடைய சொந்த வாழ்க்கை நம்பிக்கைகள் ஏறத்தாழ இருந்தாலும், மற்றவர்களுக்கு அவர் ஒர் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தார். காலையில் அலுவலகத்திற்குப் போக பஸ் செலவிற்காக எடுத்து வந்த நாலணாவை வழியில் சந்திக்கிற நொண்டி, குருடுகளுக்குப் பிச்சை போட்டு விட்டு நடந்தே போய் விடுகிற அளவுக்கு வற்றிப் போகாத தயையும், கருணையும் உள்ளவனுக்கு இந்த நூற்றாண்டு வாழ்க்கை ஏற்றதில்லைதான். ஆனாலும் சிவானந்தம் இந்த நூற்றாண்டில்தான் வேறு நூற்றாண்டு மனிதராக இருந்து வந்தார். எங்கே இருந்தார் என்கிறீர்களா? எதிலும் ஒத்துப் போகாத இந்தப் பாழாய்ப் போன தமிழ்நாட்டில் வயிற்றுக்குத் தாளம் போடுகிறவர்களின் கஷ்ட நஷ்டங்களை எடுத்துக் கூற, வயிற்றுக்குத் தாளம் போடுகிற நியாய சீலர்கள் சிலரால் நடத்தப்படுகிற ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராயிருந்தார் சிவானந்தம். தம்முடைய தைரியத்தையும், நம்பிக்கையையும் முதலாக வைத்து அந்த முதலாகிய மூலதனத்திலிருந்து பல