பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————

இரண்டாம் தொகுதி/சிவானந்தம் ஒரு ‘ஜீனியஸ்’ 🞸 677

இளைஞர்களை முன்னுக்குக் கொண்டு வந்த உழைப்பாளி அவர். இப்படிப்பட்ட உழைப்பாளி ஒரு சமயம் மிகவும் கஷ்டப்பட்டுத் தெருவில் நிற்கிற நிலைமைக்கு வந்துவிட்டார். மனைவிக்கு டி.பி. படுத்த படுக்கை. இருமல் இயந்திரமாகிவிட்டார் அந்த அம்மையார். பழைய வீடு. மழையில் சுவர்விழுந்துவிட்டது. கலியாணத்துக்கு நிற்கிற வயதில் நாலைந்து பெண்கள். இத்தனை பெரிய குடும்பத்தின் பாரத்தைத் தாங்கிக் கொண்டே காமசுந்தரர் மில் உழைப்பாளிகளின் பிரச்னைகளைப் பற்றியும் 'கற்பூர விநாயகர் மோட்டார் ஒர்க்ஸ்’ முதலாளியின் பொய்க் கணக்குகள் பற்றியும் பேச்சாலும், எழுத்தாலும் முழக்கி வந்தார் சிவானந்தம். பிறருக்காகக் கவலைப்படாமல் ஒரு நிமிஷம்கூட வாழமுடியாத மனிதர் அவர். தமக்காகக் கவலைப்படவும் அவருக்குத் தெரியாது. இப்படிப்பட்ட மனிதர் பட்டினி கிடக்காமல் இன்னும் கொஞ்சநாட்கள் வாழவேண்டுமென்று பத்துப்பன்னிரண்டு இளைஞர்கள் ஒர் எற்பாடு செய்தார்கள். ஏதோ மணிவிழா என்று கொண்டாடுகிறார்களே; அப்படி ஒரு மணி விழாக், கொண்டாடிச் சிவானந்தத்தையும் கெளரவிக்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள் அவர்கள்.

“அண்ணா! இப்படியே ஊருக்கு உழைச்சிக்கிட்டிருந்தா நீங்க என்ன ஆகுறது? இந்தத் தேசத்துலே நல்ல நல்ல ஜீனியஸ் (மேதை) எல்லாம் இப்படித்தான் பாழாயிடறாங்க. சுவத்தை வச்சித்தானே சித்திரம் எழுதணும்.?” என்று ஒருவர் சிவானந்தத்திடம் இந்த ஏற்பாட்டை மெல்லப் பிரஸ்தாபித்தார்.

“ஜீனியஸ் எல்லாம் சோத்துக்கு லாட்டரி அடிக்கனும்கிறதுதான் இந்தத் தேசத்திலே வளமுறையானா அதுக்கு நான் மட்டும் விதிவிலக்காயிருக்கணுமா?” என்று சிவானந்தம் சிரித்துக்கொண்டே கேட்டார்.

“அதுக்கில்லே. நீங்க நல்லாயிருந்தால்தானே இன்னும் நாலு பொதுக் காரியங்களுக்கு ஒடியாடி உழைக்கலாம்...”

“என்னமோ..? செய்யுங்க. இப்படிச் செய்யிறதினாலே நீங்க என்னை ரொம்பப் பெரிசா அவமானப்படுத்திட மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.” என்று அவர் குத்தலாகப் பதில் கூறிய விதம் தன்னைக் கொண்டாடுவதையோ பாராட்டுவதையோகூட அவர் எப்படிக் குறைவான ஆவலோடு வரவேற்றார் என்பதைப் புரிய வைத்தது. பொய்யர்களையும், வஞ்சகர்களையும் புகழ்ந்து கொண்டாடுகிற உலக வழக்கத்தைப் பார்த்துப் பார்த்துப்புகழையும், பாராட்டையுமே வெறுக்கத் தொடங்கியிருந்தார் அவர். தம்மைச் சுற்றி வளைய வளைய வரும் இளைஞர்களின் ஆர்வத்தையும், விருப்பத்தையும், புறக்கணிக்க முடியாமல் ஏதோ இதற்கு ஒப்புக் கொண்டிருந்தார் அவர் ஒரு நல்ல நாளாகப் பார்த்து நிதி வசூலைத் தொடங்க வேண்டுமென்று தீர்மானித்திருந்தார்கள் அந்த இளைஞர்கள். நிதிவசூல் தொடங்கியது. அந்த ஊரில் பெரிய பணக்காரரான மில் முதலாளி ஒருவரைத் தேடி முதலில் போனார்கள். அவர் எல்லோருக்கும் வெள்ளி டம்ளரில் காப்பிக் கொடுத்துத் தாராளமாக உபசாரம்செய்தார். கடைசியில் “வந்த காரியம் என்னவோ?” என்று அவர்