1194
நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
பொறுத்துத்தான் வேறு நல்ல காரியங்களும் நடக்க வேண்டும். மகளுக்குத் திருமணம் ஆவது கூட வேலை கிடைப்பதைப் பொறுத்துத்தான் சாத்தியம். வேலை கிடைக்கா விட்டால், பையில் அப்பளக் கட்டுக்களுடன் வீடு வீடாக ஏறி இறங்கும் ஏழைச் செல்லம்மாளின் பெண்ணை யார் தேடி வந்து திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்? படித்த பெண் என்றால்தான் என்ன? அப்பளம் விற்கும் செல்லம்மாளின் பெண் என்று கேட்ட பின் எத்தனை பெற்றோர்கள் துணிந்து முன் வருவார்கள்? படிப்பும், அழகும் பணத்திற்கும், அந்தஸ்திற்கும் ஈடாகி விட முடியுமா? ஒரு கல்யாணம் என்று வந்து விட்டால் பையன் அழகையும், படிப்பையுமே கவனித்தால் கூடப் பெற்றோர்கள் பணத்தையும், அந்தஸ்தையும்தானே கவனிக்கிறார்கள்?
இப்படி இந்தக் கவலை பீடித்ததிலிருந்து செல்லம்மாளுக்கு இராத் தூக்கமே போய் விட்டது. ஒரு வேலையும் ஓடவில்லை. சதா காலமும் இந்த நினைப்பே பூதாகாரமாக உருவெடுத்து வாட்டியது. அவள் விசாரித்த யாருமே நிலாவழகனைப் பற்றி நல்லபிப்ராயம் சொல்லவில்லை. தாறுமாறாகச் சொன்னார்கள். பயப்படும்படியாக இருந்தது. கேட்கவே கூசியது.
மானமுள்ள, கௌரவமான பெண்கள் யாரும் அவனிடம் சிபாரிசு என்று தேடிப் போய் விட்டுக் கௌரவமாகவும், மரியாதையுடனும் திரும்ப முடியாதென்றார்கள். எதற்கும் அஞ்சாத பஞ்சமாபாதகன் என்றார்கள். எதையும் செய்யத் தயங்காத கிராதகன் என்றார்கள். கேட்கும் போதே நடுங்கினாள் செல்லம்மாள். பக்கத்து வீட்டுப் பரிமளம் வேறு ஏதேதோ சொன்னாள். காது கொடுத்துக் கேட்க முடியாத விஷயங்களாயிருந்தன. செல்லம்மாளுக்குப் பதற்றம் தான் அதிகமாயிற்று.
“இத்தனை பெரிய மனுஷன் நீ சொல்ற மாதிரிகூட இருப்பானா? பேர் கெட்டுப் போகுமேன்னு பயமா இருக்காதா? ஊர் உலகத்துக்கு அஞ்சமாட்டானா?”
“கெடறத்துக்கு இன்னும் என்ன பேரு மிச்சமிருக்கு? அடுத்த தெரு விறகுக் கடை மன்னாரு தன் மச்சினிச்சியை நர்ஸ் ட்ரெயினிங் கோர்ஸிலே சேர்க்கணும்னு கூட்டிக்கிட்டுப் போனராம். சிபாரிசு வேணும்னாராம். நிலாவழகன் கண்ணைச் சிமிட்டிக்கிட்டே பேசினானாம். அப்புறம், நாளை ராத்திரி எட்டரை மணிக்கு உன் மச்சினிச்சியை எல்லா சர்ட்டிபிகேட்டும் எடுத்துக்கிட்டு ஹோட்டல் ப்ளு ஸ்டாருக்கு வரச்சொல்லுன்னானாம். அடக்க முடியாத ஆத்திரத்தோடப் பொறுத்துக்கிட்டு வந்த மன்னாரு, மச்சினிக்கு நர்ஸ் படிப்பே வேணாம்னு விட்டுட்டாரு.”
“தட்டிக் கேட்க ஆளில்லே. கை நீட்டிப் பணம் வாங்கறது போறாதுன்னு பொம்பளைங்களோட மானம், மரியாதையைக் கூட விலையாக் கேக்கறாப்பல இருக்கு.”
“இந்த லட்சணத்திலே கண்ணகி கற்பு ஒசத்தியா, மாதவி கற்பு ஒசத்தியாங்கற பட்டி மன்றத்துக்குத் தலைமை வகிக்கக் கண்ணகி கற்பே ஒசத்தின்னு தீர்ப்பு வேறே…”
“என்ன செய்யலாம்? அதிகாரம் அவா கையிலே இருக்கே?”