பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————

இரண்டாம் தொகுதி/நினைவின் மறுபுறம் 🞸 693

பெருமைப்பட்டுக்கொண்டு வந்திருப்பானோ என்று நினைத்தபோது அவளால் தன் ஆத்திரத்தை அடக்கவே முடியவில்லை. வகுப்புக்குப் போகாவிட்டாலும் பரவாயில்லை. முதலில் இவனுடைய கொட்டத்தை ஒடுக்கிவிட்டுத்தான் மறுவேலை. இப்படி நினைத்தபோது தண்டபாணி என்ற இரசிகனை அவள் மறந்து போனாள். தண்டபாணி என்ற காலிப்பயல்தான் அப்போது அவளுக்கு நினைவிருந்தான்.கையில் அந்தப் படத்தோடு நேரே ஹாஸ்டலுக்குப் போய் அறைக் கதவைத் திறந்து அதைப் படித்தால் என்ன என்று ஒரே ஒரு கணம் ஒரு சிறு எண்ணம் மனத்தின் ஒரு மூலையில் முளைத்து அங்கே மூண்டிருந்த ஆத்திரத்தை எதிர்த்து வளர முடியாமல் அங்கேயே கருகிவிட்டது.

அந்தப் படத்தோடு புயல் புகுந்ததுபோல் பிரின்ஸிபாலின் அறைக்குள் நுழைந்துவிட்டாள் செங்கமலம். பிரின்ஸ்பால் நிமிர்ந்து பார்த்தபோது கண்களில் நீர் முட்டி அழுதுவிடுவது போன்ற கோலத்தில் செங்கமலம் நின்றாள்.

படத்தைப் பிரித்துக் கொடுத்து விவரத்தையும் கூறியபோது பிரின்ஸிபால் எரிமலையாக மாறிவிட்டார்.

“நீ அழாதேம்மா! அந்தப் போக்கிரி தண்டபாணியை டிஸ்மிஸ் செய்து தீர்த்துக் கட்டி வெளியே அனுப்ப நானே சரியான குற்றச்சாட்டை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். இது போதும் எனக்கு, நீ போய் நிம்மதியாக வகுப்பில் உட்கார், நான் பார்த்துக் கொள்கிறேன். பயல் இன்றோடு தொலைந்தான்” என்று சொல்லிச் செங்கமலத்தைச் சமாதானப்படுத்தி அனுப்பினார் பிரின்ஸிபால்.

நன்றாகப் பழிவாங்கிவிட்ட திருப்தியோடு அவள் திரும்பவும் வகுப்புக்குள் வந்து உட்கார்ந்தபோது, "என்னடி, அழுதாயா? கண்னெல்லாம் சிவந்திருக்கிறதே!” என்று பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண் கேட்டாள். செங்கமலம் அவளுக்குச் சரியாகப் பதில் கூறாமல் மழுப்பிவிட்டாள். நேரமாக ஆகச் செங்கமலத்துக்கு வகுப்பில் இருப்புக் கொள்ளவில்லை. தான் செய்த காரியம் சரிதான் என்று திருப்தியாகவும் இருந்தது. ‘அநியாயமாக ஒரு தீரனைக் காலை ஒடித்து அனுப்பப் போகிறாய் நீ’ என்று அவளுடைய மனச்சாட்சியே அவளை எதிர்த்துக் கேட்டதற்குத் ‘தான் செய்தது சரியல்ல’ என்று அதிருப்தியாகவும் இருந்தது. நிம்மதியின்றித் தவித்தாள் அவள். அங்கிருந்தால் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. அரைநாள் லீவு சொல்லிவிட்டு ஹாஸ்டலுக்குத் திரும்பிவிட்டாள் செங்கமலம் இடைவேளையின் போது ஹாஸ்டலுக்குச் சாப்பிட வந்திருந்த தோழி ஒருத்தி அவளுடைய அறையைத் தேடி வந்து சில விவரங்களைக் கூறி விட்டுப் போனாள்.

“நீ ஒன்றும் சொல்லாவிட்டாலும் தானாக எல்லாம் தெரிந்து விட்டதடி செங்கமலம். பிரின்ஸிபால் சாயங்காலம் மூன்று மணிக்கு அந்தத் ‘தண்டத்தைத்’ தமது அறைக்கு வந்து தம்மைப் பார்க்கச் சொல்லியிருக்கின்றாராம். காலேஜ் பூராவும் இதே பேச்சுத்தான். அநேகமாகக் காலேஜிலிருந்தே டிஸ்மிஸ் செய்துவிடுவார்களாம். ஆனால் அவன் என்னவோ சிறிதுகூடக் கவலைப்படாமல் வழக்கம்போல் சிரித்துப்