பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

692 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

“மிஸ்டர் தண்டபாணி உங்களைத்தானே? ஹல்லோ! பாடுவதை நிறுத்துங்கள். உங்களுக்குக் கோடி புண்ணியமாகப் போகிறது. உங்களுடைய அருமைக் கவிதையை அழகாக ஒரு தாளில் எழுதிக் கண்ணாடிச் சட்டம் போட்டு வேண்டுமானால் கொடுங்கள்; படித்துக் கொள்கிறேன். இப்படி அர்த்த ராத்திரியில் உயிரை வாங்காதீர்கள்” என்று கடுமையாக நினைத்துச் சொல்லாக வெளிவரும்போது நினைப்பிலிருந்த கடுமை சரிபாதி தவிர்ந்துபோய்ச் சமாதானமாகப் பேசுவது போலவே அவனிடம் பேசி டெலிபோன் ரீஸிவரை வைத்தாள் செங்கமலம். இப்போதும் எந்தக் காரணத்துக்காக அவனை வெறுக்க வேண்டுமென்று தோன்றியதோ அதே காரணத்துக்காகவே அவனைக் காதலிக்க வேண்டும் போலவும் தோன்றியது அவளுக்கு.

அறைக்குத் திரும்பிப் போகும்போது ‘கருமேகக் காட்டினிலே நீ ஓர் - கனக மின்னலடீ’ என்று மெல்ல முணுமுணுப்பதுபோல் தனக்குத் தானே சொல்லிப் பார்த்துக் ரெகண்டாள் அவள்.‘மின்னலடி என்று அடிபோட்டுப் பாடியிருக்கிறானே! இந்த முரடனுக்கு எத்தனை துணிச்சல்’ என்று எண்ணிய போது எரிச்சலாகவும் இருந்தது. அடுத்த கணமே அப்படிப் பாடியிருப்பதிலுள்ள முரட்டுத்தனத்தையே எதற்காகவோ இரசிக்க வேண்டும் போலவும் இருந்தது. செங்கமலம் அன்றிரவு படுக்கையில் படுத்துப் போர்வையால் போர்த்திக் கொண்டு தூங்கினாள் என்பதற்குப் பதில் நளினமான நினைவுகளையே போர்த்துக் கொண்டு தூங்கினாள் என்று வருணிப்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

என்ன ஆச்சரியம்! மறுநாள் காலை அவள் சொன்னபடியே செய்துவிட்டான் தண்டபாணி, முதல் பாடவேளையின்போது வெளிவராந்தாவின் பக்கமாக நடந்து தண்ணீர் குடிக்கப் போய்க் கொண்டிருந்த செங்கமலத்தைக் கைத் தட்டிக் கூப்பிட்டு, “இந்தா, நீ சொன்னபடியே செய்துவிட்டேன்!” என்று படம் போல் சட்டமிட்டுக் காகிதத்தில் கட்டிய ஒரு பொட்டலத்தை அவளிடம் நீட்டினாள். தண்டபாணி அதை அவளிடம் கொடுக்கும் போது அவனோடு அரட்டையிலும் விடலைத்தனத்திலும் பெயர் பெற்ற இரண்டு மூன்று மாணவர்களும் சிரித்தபடி கூட நின்றார்கள். மின்னல் மின்னுகிற நேரத்தில் அதை அவள் கையில் கொடுத்துவிட்டு அவன் போய்விட்டான். அதைக் கையில் வைத்துக் கொண்டு வகுப்புக்குள்ளும் போக முடியாமல் வெளியிலேயும் போக முடியாமல் செங்கமலம் திண்டாடினாள்.ஒரு முழு ‘புல்ஸ்கேப்’ தாளைக் கண்ணாடிச் சட்டம் போட்டால் எவ்வளவு பெரிதாயிருக்குமோ அவ்வளவு பெரிதாயிருந்த அந்தப்படத்தை எடுத்துக் கொண்டு வகுப்புக்குள் போனால் மானம் போய்விடும். ஹாஸ்டலுக்குப் போய் வைத்துவிட்டு வரலாமென்றால் வகுப்பில் அதற்குள் பாடம் ஆரம்பமாகிவிடும்.

தன்னை அவமானப்படுத்துவதற்காகவே சக மாணவர்களை ஜமா சேர்த்துக் கொண்டு வந்து தண்டபாணி அதை அங்கே தன்னிடம் கொடுத்துவிட்டுப் போயிருப்பதாகத் தோன்றியது அவளுக்கு தன்னிடம் கொண்டு வந்து கொடுப்பதற்கு முன் தண்டபாணி அதை உடன் இருந்த மாணவர்களிடமும் படித்துக் காட்டிப்